தமிழகத்தில் புதிதாக 50 சுகாதார மையங்கள் - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
தமிழகத்தில் புதிதாக 50 சுகாதார மையங்கள் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை சின்ன போரூர் பகுதியில் கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனை கருவிகள் மற்றும் நுரையீரல் செயல்பாட்டை கண்டறியும் கருவி ஆகியவற்றை பொதுமக்களுக்கான மருத்துவ பயன்பாட்டிற்கு வழங்கிய பின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது;-
“தமிழகத்தில் கிராமப்புறத்தில் 25 ஆரம்ப சுகாதார மையங்களும், நகர்ப்புறத்தில் 25 சமுதாய சுகாதார மையங்களும் புதிதாக தொடங்கப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பு வரும் 29-ந் தேதி நிதிநிலை அறிக்கையின் போது வெளியிடப்படும்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்குவதற்கான அறிவிப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதன்படி, சித்த மருத்துவ பல்கலைகழகத்துக்கான தற்காலிக அலுவலகத்தை அமைந்தகரையில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவமனையில் 14-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார்.”
இவ்வாறு அவர் கூறினார்.