கடலூர்: மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விபத்து: கணவன்-மனைவி உயிரிழப்பு....!
கடலூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் கணவன்-மனைவி உயிரிழந்தனர்.
புவனகிரி,
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் சிறுவறப்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி ரவி (வயது 58). இவரது மனைவி விஜயா(50). இவர்கள் இருவரும் நேற்று காலை புவனகிரி அருகே மேலமனக்குடியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
மகள் வீட்டில் ஒருநாள் தங்கிவிட்டு இன்று காலை 10 மணி அளவில் இருவரும் மீண்டும் மொட்டார் சைக்கிள் மூலம் ஊர் திரும்பினர். இவர்கள் வந்த மோட்டார் கைக்கிள் புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் சாலையில் வரும் போது எதிரே வந்த கார் மோதி உள்ளது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட தம்பதிகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மரத்தில் மோதி நின்றது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
இது குறித்து தகவல் அறிந்த புவனகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உயிரிழந்த ரவி மனைவி விஜயா ஆகிய இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.