பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்: 11-வது நாளாக நேற்றும் உயர்ந்தது

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. நேற்றும் 11-வது நாளாக விலை உயர்ந்திருந்தது. தொடர்ந்து விலை உயர்ந்து வருவதால், வாகனங்களில் செல்லும் பலர் பொது போக்குவரத்துக்கு மாறி வருகின்றனர்.

Update: 2022-04-03 21:55 GMT
சென்னை,

பெட்ரோல் விலை கடந்த மார்ச் 22-ந் தேதியில் இருந்து தொடர்ந்து அதிகரித்து வந்து, கடந்த 30-ந் தேதி ஒரு லிட்டர் 106 ரூபாய் 69 காசை தொட்டது, ஏற்கனவே இருந்த உச்சத்தை தாண்டிய வரலாறு காணாத விலை உயர்வாக பார்க்கப்பட்டது. அதன் பின்னரும் தொடர்ந்து விலை உயர்ந்தபடி ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருகிறது.

கடந்த 22-ந் தேதி முதல் ஏற்றத்துடன் காணப்படும் பெட்ரோல்-டீசல் விலை நேற்று வரையிலான 13 நாட்கள் நிலவரப்படி, 11 நாட்கள் விலை அதிகரித்து இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அந்த வகையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 75 காசு உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் 108 ரூபாய் 96 காசுக்கு விற்பனை ஆனது.

டீசல்

டீசல் விலையை பொறுத்தவரையில் அதுவும் ராக்கெட் வேகத்தில் புதிய உச்சத்தை நோக்கி பயணம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 3-ந் தேதி ஒரு லிட்டர் 102 ரூபாய் 59 காசுக்கு விற்பனையானதுதான் டீசலின் அதிகபட்ச விலையாக இருந்தது. தொடர்ச்சியாக ஏறுமுகத்தில் இருக்கும் டீசல் விலை, இன்னும் சில நாட்களில் புதிய உச்சத்தை எட்டிவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்று டீசல் லிட்டருக்கு 83 காசு அதிகரித்து இருந்தது. கடந்த 11 நாட்களிலான விலை உயர்வுகளுடன் ஒப்பிடுகையில், நேற்றைய உயர்வுதான் ஒருநாளில் அதிகபட்சமாக பார்க்கப்படுகிறது. அதன்படி, ஒரு லிட்டர் டீசல் 99 ரூபாய் 4 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படியே விலை அதிகரித்தால், இன்றோ அல்லது நாளையோ டீசல் விலை சதம் அடித்துவிடும்.

பொது போக்குவரத்து

பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்துவருவதால், சென்னை உள்பட பிரதான நகரங்களில் அலுவலகத்துக்கு செல்பவர்களில் பலர் மோட்டார்சைக்கிள், கார்களை தவிர்த்து, பொது போக்குவரத்தை பயன்படுத்த தொடங்கி இருப்பதை சில தகவல்களின் அடிப்படையில் உறுதிசெய்ய முடிகிறது.

உதாரணமாக, சென்னையில் பொது போக்குவரத்தில் முக்கிய இடத்தை பிடித்துவரும் மெட்ரோ ரெயிலில் பயணிப்பவர்களின் புள்ளிவிவரங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அதில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 31 லட்சத்து 86 ஆயிரம் பேர் பயணித்ததாக கூறப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் 44 லட்சத்து 67 ஆயிரம் பேர் பயணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 13 லட்சம் பயணிகள் அதிகரித்திருக்கின்றனர். அதிலும் கடந்த மாத இறுதியில் பெட்ரோல் விலை உயர்வுக்குப் பிறகே பலர் மெட்ரோ ரெயிலை பயன்படுத்த தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்