அரசு பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல்
செருமாவிலங்கை அரசு பள்ளியில் மாதிரி நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டது.
காரைக்காலை அடுத்த நெடுங்காடு செருமாவிலங்கை பகுதியில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில், மாணவர்களின் தலைமைப் பண்பை வளர்க்கும் நோக்கத்திலும், இந்திய நாடாளுமன்ற அமைப்பு முறையை தெரிந்து கொள்ளும் வகையிலும் மாணவர்களிடையே தேர்தல் நடத்தப்பட்டு அமைச்சரவை அமைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கடந்த 26-ந்தேதி தேர்தலில் பங்கு பெற விருப்பமுள்ள மாணவர்களிடம் இருந்து வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. தேர்தலில் நடப்பது போல் மாணவர் வேட்பாளர்கள் தங்களுக்குரிய சின்னங்களை காண்பித்து வாக்குகளை சேகரித்தனர். தொடர்ந்து கடந்த 28-ந்தேதி தேர்தல் நடந்தது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. அவர்களை கொண்டு பள்ளியில் அமைச்சரவை அமைக்கப்பட்டது. நிதி, சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அந்தந்த துறை அமைச்சருக்குரிய பணிகள் மற்றும் பொறுப்புகள் விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியை மல்லிகா மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.