தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கம் - தமிழக அரசு புதிய அறிவிப்பு
கொரோனா தொடர்பான தமிழக அரசின் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னை,
நாடு முழுவதும் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், கடந்த 31 ஆம் தேதியோடு கொரோனா நெறிமுறைகளும், கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கொரோனா பரவல் விகிதத்தை கருத்தில் கொண்டு மாநில அரசுகள் இது சம்பந்தமான முடிவுகளை எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்திய அரசு தெரிவித்தது.
இதனை தொடர்ந்து மராட்டிய மாநிலம், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில அரசுகள், தங்கள் மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளன. டெல்லியில் முக கவசம் அணிவது கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டது. அதே சமயம் மாஸ்க், கை கழுவுதல், சானிடைசர் உபயோகித்தல் உள்ளிட்ட அடிப்படை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் பின்பற்றிக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பான அரசின் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்படுவதாக தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதல் தவணை தடுப்பூசியை 92 சதவீதம் பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 75 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டிருப்பதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து கொரோனா பாதிப்புகள் குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடுப்பூசி செலுத்திக் கொள்வது கட்டாயமில்லை என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் தங்கள் சுயவிருப்பத்தின் அடிப்படையில் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.