திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சோகம்....!
திருத்துறைப்பூண்டி அருகே குளத்தில் மூழ்கி அண்ணன்-தம்பி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் பகுதியை சேர்ந்த அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் பசுபதி. இவரது மகன் ஹரிநாத் (வயது 19) டிப்ளமோ படித்துவிட்டு சென்னையில் பாட்டி வீட்டில் வசித்து வருகிறார். பசுபதியின் தம்பி மகன் ஷியாம் குமார் (17) டிகிரி வரை படித்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று பசுபதியின் மகள் பவதாரணி, காதணி விழா நடைபெற இருந்தது. அந்த விழாவிற்காக உறவினர்கள் அனைவரும் பசுபதி வீட்டிற்கு முதல் நாளே வந்து விட்டனர். விழாவிற்கு வந்த ஹரிநாத், மற்றும் ஷாம் குமார் இருவரும் நெடும்பலம் பகுதியில் உள்ள பள்ளியப்பன் குளத்திற்கு குளிக்க சென்றனர்.
நீண்ட நேரமாகியும் அவர் வீட்டிற்கு வராததால் குடும்பத்தினர் அந்தப் பகுதியில் தேடினர். அப்போது குளத்தின் அருகே இருவரும் நின்று கொண்டிருந்ததாக அந்த பகுதியில் உள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் விரைந்து சென்று குளத்திற்குள் தேடினர். அப்போது இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனை அறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து உயிரிழந்த ஹரிநாத், ஷாம் குமார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
காதணி விழாவிற்கு வந்த 2 இளைஞர்கள் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.