கார்-லாரி நேருக்கு நேர் மோதல்; நிதிநிறுவன அதிபர் உள்பட 4 பேர் பலி
கோவிலுக்கு சென்று விட்டு திரும்பியபோது பெரம்பலூர் அருகே காரும்-லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நிதிநிறுவன அதிபர் உள்பட 4 பேர் பலியானார்கள்.
பெரம்பலூர்,
ஐ.டி. நிறுவன ஊழியர்
கள்ளக்குறிச்சி தீர்த்தாலு நகர் பகுதியை சேர்ந்தவர் கதிரவன் (வயது 45). இவர் கர்நாடகம் மாநிலம் பெங்களூருவில் உள்ள ஒரு ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலத்தில் இருந்து, தற்போது வரை கதிரவன் சொந்த ஊரில் வீட்டில் இருந்து வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கதிரவன் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம், சமயபுரத்தில் உள்ள கோவில்களுக்கு சென்று வருவதற்காக இன்று காலை தனது மகன் சந்திரவதனன் (13), தாய் தமிழரசி (65), நிதிநிறுவன அதிபரும், தனது தம்பியுமான கார்முகில் (40), அவரது மகன் லிங்கநேத்திரன் (8), நண்பரான கள்ளக்குறிச்சி முடியனூரை சேர்ந்த கண்ணன் (45), அவரது மனைவி வேதவள்ளி (40), அவர்களின் மகன்கள் கிஷோர் (12), திவாகர் (6) ஆகியோருடன் ஒரே காரில் அதிகாலை புறப்பட்டு சென்றார்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்
முதலில் அவர்கள் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, அங்கிருந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு புறப்பட்டனர். ஆனால் மதியம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், அவர்கள் இனாம் சமயபுரம் கண்ணப்புரம் ஆதி மாரியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, பெரம்பலூரில் ஆயுர்வேத சிகிச்சைக்காக ஒரு டாக்டரை சந்தித்து விட்டு கள்ளக்குறிச்சிக்கு செல்லலாம் என்று புறப்பட்டுள்ளனர். காரை கதிரவன் ஓட்டினார்.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், விஜயகோபாலபுரத்தை தாண்டி சிறுவாச்சூர் மலையப்ப நகர் பிரிவு ரோடு அருகே கார் சென்று கொண்டிருந்தது.
கார்-லாரி நேருக்கு நேர் மோதல்
இவர்கள் மதிய உணவு வீட்டில் இருந்தே எடுத்து வந்துள்ளனர். அதனை பெரம்பலூர் சாய்பாபா கோவில் அருகே அமர்ந்து சாப்பிட்டு விட்டு செல்லலாம் என்று எண்ணிருந்தனர். அப்போது அதே சாலையில் கதிரவனின் காருக்கு பின்னால் இடதுபுறமாக வந்து கொண்டிருந்த ஒரு கார் திடீரென்று முந்தி சென்றதாக கூறப்படுகிறது. இதனால் கதிரவன் அந்த கார் மீது மோதாமல் இருப்பதற்காக வலதுபுறமாக திருப்பியுள்ளார். அப்போது எதிரே தடுப்புச்சுவர் இல்லாததால் அடுத்த சாலைக்கு கதிரவன் கார் சென்றது.
அப்போது எதிரே பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, பூலாம்பாடி அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு, திருச்சியை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரியின் டிரைவரும் எதிரே வந்த காரின் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடித்துள்ளார். ஆனால் லாரி நிற்காமல், காரின் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.
4 பேர் பலி
இந்த விபத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. லாரிக்கு முன்பக்கம் மட்டுமே சேதமடைந்தது. மேலும், ஒரு மின்கம்பமும் முறிந்தது. காரினுள் இடிபாடுகளுக்கிடையே சிக்கியதில், கதிரவனின் தம்பி கார்முகில், அவரது மகன் லிங்கநேத்திரன், நண்பர் கண்ணன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் காரில் சிக்கி படுகாயமடைந்த கதிரவன், அவரது மகன் சந்திரவதனன், தாய் தமிழரசி, கண்ணன் மனைவி வேதவள்ளி, அவர்களது மகன் கிஷோர் ஆகியோர் படுகாயமடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தனர். இந்த விபத்தில் கண்ணனின் 2-வது மகன் திவாகருக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் படுகாயமடைந்தவர்களை காரில் இருந்து மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமிழரசி உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்ந்தது.
போலீசார் விசாரணை
மேலும் சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி நேரில் சென்று பார்வையிட்டார். இதையடுத்து, சந்திரவதனன், கிஷோர் ஆகியோர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கதிரவனும், வேதவள்ளியும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லாரி டிரைவரான திருச்சி விமானநிலையம் காமராஜர் நகரை சேர்ந்த ஆரோக்கிய நெல்சனிடமும் (36) போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.