கோவை: கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் மோசடி- 2 பேர் கைது

அட்டை பெட்டிக்குள் ரூ.1 கோடி வைத்து இருப்பதாக கூறி கல்லூரி மாணவரிடம் ரூ.10 லட்சம் மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-04-01 12:30 GMT
கோவை,

ஈரோடு மாவட்டம் சித்தோடை சேர்ந்தவர் செந்தில்குமார் (49). இவர் உலர் பழங்களை மொத்தமாக எடுத்து வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மனைவி ஸ்ரீதேவி (42). இவர்களுடைய மகன் ரமணா (19). இவர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். 

இந்தநிலையில் செந்தில்குமாரின் தொழிலை விரிவுப்படுத்த ரூ.2 கோடி பணம் தேவைப்பட்டது. இதற்காக செந்தில்குமார் மற்றும் அவருடைய மனைவி ஸ்ரீதேவி ஆகியோர் முகநூலில் செல்போன் எண்ணை போட்டு பதிவு செய்து வைத்து இருந்தனர்.

இதைபார்த்த கோவையை சேர்ந்த 2 பேர் ஸ்ரீதேவியை தொடர்புகொண்டு கோவை செட்டிப்பாளையத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களது பெயர் கவுதம் மற்றும் மார்டின் என்று கூறி அறிமுகம் ஆகி உள்ளனர். நீங்கள் கேட்கும் ரூ.2 கோடியை தங்களுக்கு தெரிந்த நிதி நிறுவனங்களில் வாங்கி தருவதாகவும், இதற்காக ரூ.25 லட்சம் கமிஷனாக தரவேண்டும் என்றும் கூறி உள்ளனர். 

இதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். தொடர்ந்து ஸ்ரீதேவியை செல்போனில் அழைத்து பேசிய கவுதம் நீங்கள் கேட்ட ரூ.2 கோடி கிடைக்கவில்லை. ரூ.1 கோடிதான் தற்போது தயாராக உள்ளது என்றும், அதை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதிக்கு வந்து பெற்றுச்செல்லுமாறு செல்போனில் பேசினார். அப்போது அவரிடம் தனது மகன் ரமணாவிடம் நீங்கள் கேட்ட ரூ.25 லட்சத்தை கொடுத்து அனுப்பிவைக்கிறேன், அவரிடம் ரூ.1 கோடியை கொடுத்துவிடுங்கள் என்று ஸ்ரீதேவி கூறி உள்ளார்.

இதையடுத்து கடந்த 25-ந் தேதி ஸ்ரீதேவி தனது மகன் ரமணா மற்றும் ஈரோட்டை சேர்ந்த நிதி நிறுவன ஊழியர்கள் 3 பேருடன் காரில் ஈரோட்டில் இருந்து கோவை ரேஸ்கோர்சில் உள்ள ஒரு தனியார் கல்லூரி அருகே மதியம் வந்து நின்றார். 

அப்போது அங்கு தயாராக நின்றுகொண்டு இருந்த கவுதம், மார்ட்டின் ஆகியோர் ரமணாவிடம் வந்து ஒரு பெட்டியை காட்டி அதற்குள் ரூ.1 கோடி உள்ளது என்று கூறியவாறு காருக்குள் வைத்தனர். பின்னர் ரமணாவிடம் ரூ.25 லட்சம் உள்ளதாக சொல்லிய பையை வாங்கிக்கொண்டு அங்கு இருந்து மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் சிறிது நேரத்தில் ரமணா அந்த பெட்டியை உடைத்து பார்த்தார். அதற்குள் பணத்துக்கு பதில் பல்துலக்கும் டூத் பேஸ்ட் மற்றும் டூத் பிரஸ், காய்கறிகளின் தோல்களை வெட்ட பயன்படுத்தும் கத்திகள் இருந்தன. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ரேஸ்கோர்ஸ் போலீஸ்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுஜாதா வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வந்தார்.

இந்த கொள்ளையர்களை பிடிப்பதற்காக தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். அப்போது கோவையில் பதுங்கி இருந்த 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 

அதில், ஸ்ரீதேவியிடம் கவுதம் என்ற பெயரில் அறிமுகமாகியது கோவை சுந்தராபுரத்தை சேர்ந்த ஜனகன் (42) மற்றும் செட்டிப்பாளையத்தை சேர்ந்த மார்டின் அமல்ராஜ் (42) என்பதும், ஜனகன் வீட்டு புரோக்கர், பழைய மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்து கொடுக்கும் தொழில் செய்து வந்ததும், மார்டின் அமல்ராஜ் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்ததும், இருவரும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைதுசெய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்