அனுமதியின்றி நள்ளிரவில் வைத்த அம்பேத்கர் சிலையை அகற்ற நடவடிக்கை - எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் போராட்டம்

ஆத்தூர் அருகே அனுமதியின்றி நள்ளிரவில் வைத்த அம்பேத்கர் சிலையை அகற்ற மேற்கொண்ட நடவடிக்கை போது சிலையின் பீடத்தின் மீது பெண்கள் அமர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Update: 2022-04-01 05:55 GMT
சேலம்:

தமிழகம் முழுவதும் பொது இடங்களில் தலைவர்களின் சிலைகள் அமைக்க உரிய அனுமதி பெற்று வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிலைகள் வைக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் பகுதியில் நேற்று இரவு திடீரென டாக்டர் அம்பேத்கருடைய சிலை பீடம் அமைக்கப்பட்டு அந்த பீடத்தின் மேல் வைக்கப்பட்டது. உடனடியாக வருவாய் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட எஸ்பி அபிநவ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று சிலையை அகற்ற வேண்டும், அனுமதி பெற்ற பின்னர் வையுங்கள் என கூறி வருகின்றனர்.

பொதுமக்கள் ஒரு தரப்பினர் சிலையை அகற்ற முடியாது எனக் கூறி சிலையின் பீடத்தின் மீது பெண்கள் அமர்ந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு தொடர்ந்து பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது.

மேலும் செய்திகள்