குறுக்கு வழியில் வந்தவர்கள் என்னை ராஜினாமா செய்ய சொல்கிறார்கள்
குறுக்கு வழியில் வந்தவர்கள் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்ய சொல்கிறார்கள் என்று வைத்தியநாதன் கூறியுள்ளார்.
குறுக்கு வழியில் வந்தவர்கள் எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினமா செய்ய சொல்கிறார்கள் என்று வைத்தியநாதன் கூறியுள்ளார்.
புதுவை காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவரும், லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.வுமான வைத்தியநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்களின் நம்பிக்கைக்குரிய...
புதுவை மாநிலத்தில் குறுக்கு வழியில் எம்.எல்.ஏ. ஆனதன் விளைவாக மக்களால் தேர்வு செய்யப்பட்ட என்னைப் பார்த்து ராஜினாமா செய்துவிட்டு வர அழைக்கிறார் வி.பி.ராமலிங்கம். சட்டமன்ற தேர்தலின்போது பல அமைச்சர்கள், நியமன எம்.எல்.ஏ.க்கள், சபாநாயகர் என பல பேர் என்னை எதிர்த்து பணி செய்தபோதும் தனி மனிதனாக காங்கிரஸ் பேரியக்கம், அதன் கூட்டணி கட்சிகளின் உதவியோடு லாஸ்பேட்டை தொகுதி மக்களின் நம்பிக்கைக்குரிய எம்.எல்.ஏ.வாக உருவாகியுள்ளேன்.
கடந்த 5 ஆண்டு காலமாக லாஸ்பேட்டை தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் சாதிக்க முடியாத பல காரியங்களை நான் ஒரு வருடத்தில் சாதித்திருப்பதை தொகுதி மக்கள் அறிவார்கள்.
நகைப்புக்குரிய கேள்வி
கடந்த 5 ஆண்டு காலம் காங்கிரஸ் இயக்கத்தில் இருந்துகொண்டு பதவி, புகழ் என அனைத்தையும் அனுபவித்து காங்கிரசுக்கு மாபெரும் துரோகத்தை செய்துவிட்டு சென்ற நபர்கள் எல்லாம் மாநிலத்தின் உரிமைக்காகவும், மக்களின் நலனுக்காகவும் பயணிக்கும் என்னை போன்றவர்களுக்கு எதிராக கேள்வி எழுப்புவது நகைப்புக்குரியதாக உள்ளது.
சட்டமன்றத்தில் பேசும்போது, கடந்த காங்கிரஸ் ஆட்சியை குறை சொன்ன நியமன எம்.எல்.ஏ. வி.பி.ராமலிங்கம் கடந்த ஆட்சியின்போது அனுபவித்த சலுகைகளையும், நலன்களையும் மக்கள் நன்கு அறிவார்கள். இவர்கள் விட்டுக்கொடுத்ததால் தான் நான் எம்.எல்.ஏ. ஆனேன் என்ற கருத்தை வி.பி.ராமலிங்கம் முன்வைத்துள்ளார்.
துரோகம் செய்தாரா?
அப்படியானால் இவர் சார்ந்து இருக்கக்கூடிய அரசியல் கட்சிக்கு இவர் துரோகம் செய்தாரா? என்ற கேள்வியை நான் முன்வைக்கிறேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட சாமிநாதன் இவருக்கு பதில் அளிப்பாரா?, என்னை ராஜினாமா செய்ய சொல்லும் அதிகாரம் என் தொகுதி மக்களுக்கு உள்ளதே தவிர வேறு யாருக்கும் இல்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் வைத்தியநாதன் எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.