அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ‘காயகல்ப்’ விருது
புதுவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ‘காயகல்ப்’ விருதினை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ‘காயகல்ப்’ விருதினை முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
தரவரிசை கமிட்டி
மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் பரிந்துரைப்படி புதுவை அரசு நலவழித்துறை, மாநில சுகாதார இயக்கம் சார்பில் சுகாதாரத்தில் மிக உயர்ந்த தரத்துடன் இயங்கும் ஆஸ்பத்திரிகளுக்கு ஆண்டுதோறும் ‘காயகல்ப்’ விருது வழங்கப்படுகிறது. சிறந்த சுகாதார வசதி, மேம்படுத்தப்பட்ட சிகிச்சை, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் இந்த விருது பெற தகுதியானவை.
விருதுடன் கூடிய பரிசுத்தொகையையும் மத்திய அரசு வழங்கி ஊக்கப்படுத்துகிறது. அப்படி தேர்வு செய்யப்படும் சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளுக்கு தரவரிசை கமிட்டி நேரில் சென்று ஆய்வு செய்து மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவமனைகளை விருதுக்கு பரிந்துரை செய்கிறது.
குழந்தைகள் ஆஸ்பத்திரி
புதுவை மாநிலத்தில் உள்ள மாவட்ட மருத்துவமனை, சமுதாய நலவழி மையம், ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தாய்-சேய் நல மையம் ஆகியவற்றுக்கு முறையாக ‘காயகல்ப்’ விருதுக்கு உண்டான விதிமுறையின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அதன்படி முதல் பரிசை ராஜீவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் ஆஸ்பத்திரி, கரிக்கலாம்பாக்கம் சமுதாய நலவழி மையம், அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம், கொரவள்ளிமேடு சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையம் ஆகியவை பெறுகின்றன. ஆறுதல் பரிசுகளை சூரமங்கலம், மேட்டுப்பாளையம், அபிசேகப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையங்கள் பெறுகின்றன.
ரங்கசாமி வழங்கினார்
காயகல்ப் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் உதயகுமார், இயக்குனர் ஸ்ரீராமுலு, பொது சுகாதார துணை இயக்குனர் முரளி, குடும்ப நல துணை இயக்குனர் டாக்டர் ஆனந்தலட்சுமி, நோய்த்தடுப்பு துணை இயக்குனர் ரகுநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.