கரூரில் பயங்கரம்:3 இளைஞர்களை ஓடஓட விரட்டி வெட்டிய மர்ம கும்பல்
கரூரில் 3 இளைஞர்களை ஓடஓட விரட்டி அரிவாளால் வெட்டிய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கரூர்,
அரிவாள் வெட்டு
கரூர் மாவட்டம் திருக்காம்புலியூர் பகுதியை சேர்ந்தவர்கள் வசந்த் (வயது 22), தர்மன் (23), வல்லரசு (23). இவர்கள் 3 பேரும் நேற்று இரவு கரூர்-கோவை நெடுஞ்சாலையில் உள்ள முனியப்பன் கோவில் அருகே நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் அங்கு வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் வசந்த் உள்ளிட்ட 3 பேரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உயிர்பிழைக்க அங்கிருந்து தப்பி ஓட முயன்றுள்ளனர். ஆனால் அந்த மர்ம கும்பல் அவர்களை ஓட ஓட விரட்டி சென்று அரிவாளால் வெட்டினர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
இதில், தலை, கை, கால்களில் பலத்த காயம் அடைந்த அவர்கள் வலியால் அலறி துடித்தனர். இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு விரைந்து வந்தனர். இதனைதொடர்ந்து அந்த கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி செல்ல முயன்றனர். அப்போது அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் முன்பக்க கண்ணாடியை அடித்து நொறுக்கி விட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இதையடுத்து, படுகாயமடைந்த வசந்த், தர்மன் மற்றும் லேசான காயம் அடைந்த வல்லரசு ஆகியோரை அப்பகுதி மக்கள் மீட்டு கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
முன்விரோதம் காரணமா?
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கரூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், தப்பியோடிய மர்ம கும்பலுக்கும், இவர்களுக்கும் ஏதேனும் முன்விரோதம் உள்ளதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டு உள்ளது.