திருக்கடையூர் அருகே முதியவர் அடித்துக் கொலை - 5 பேர் கைது
திருக்கடையூர் அருகே முதியவரை அடித்துக் கொலை செய்த 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே கிள்ளியூர் ஊராட்சிக்கு உட்பட்ட ராமன் கோட்டத்தை சேர்ந்தவர் சித்திரன் (வயது 70). விவசாய கூலி தொழிலாளி இவருக்கு 2 மகன் ஒரு மகள் உள்ளன. இவரது மகன் பிரகாஷ் (15) என்பவர் திருக்கடையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு (வயது 60), கலியபெருமாள் மகன் பாலமுருகன் (35). இவர்களுக்கும், சித்திரன் குடும்பத்திற்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் மகன் பிரகாஷ் பள்ளிக்கு செல்லாததால், நேற்று இரவு அவரது தந்தை சித்திரன் அவனை திட்டியுள்ளார்.
இதனைக் கேட்ட பிச்சைக்கண்ணு, பாலமுருகன், காளியம்மாள் (32), பிரியா (30) ஜெயலட்சுமி (55) ஆகிய 5 பேரும் தங்களை ஏன் திட்டுகிறாய் என சித்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது வாக்குவாதம் முற்றியதில் பிச்சைக்கண்ணு அங்கு கிடந்த கட்டையை எடுத்து சித்திரனை பலமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்து நிலைகுலைந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். சித்திரன் மனைவி மற்றும் அவரது மகன் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து தகவலின்பேரில் செம்பனார்கோயில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முதியவர் சித்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் அதே பகுதியை சேர்ந்த பிச்சைக்கண்ணு, ஜெயலட்சுமி, பாலமுருகன், காளியம்மாள், பிரியா ஆகிய 5 பேரை வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் ராமன்கோட்டகம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.