6 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் சென்னை பெருங்குடியில் அமேசானின் 18 மாடி கட்டிடம்

6 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் சென்னை பெருங்குடியில் அமேசானின் புதிய 18 மாடி கட்டிடத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Update: 2022-03-29 23:19 GMT
சென்னை,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் அமேசான் நிறுவனம் எலக்ட்ரானிக் பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள், மருந்து பொருட்கள், அழகுசாதன பொருட்கள், ஆடைகள் என அனைத்து விதமான பொருட்களையும் இணையதளம் மூலம் விற்பனை செய்து வருகிறது.

இணையதள விற்பனை நிறுவனங்களில் முன்னணி நிறுவனமாக இருந்து வரும் அமேசான் நிறுவனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி பிரிவையும் சென்னையில் தொடங்கி செயல்படுத்தி வருகிறது.

அமேசான் நிறுவனத்துக்கு ஏற்கனவே சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் 2 அலுவலகங்களும், கோவை சரவணம்பட்டியில் ஒரு அலுவலகமும் உள்ளது.

18 மாடி புதிய கட்டிடம்

தற்போது சென்னை பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள உலக வர்த்தக மைய வளாகத்தில் 6 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில் 18 மாடிகளை கொண்ட புதிய அலுவலகத்தை அமேசான் நிறுவனம் அமைத்துள்ளது.

இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அமேசான் நிறுவனத்தின் துணைத்தலைவர் சேட்டன் கிருஷ்ணசாமி வரவேற்று பேசினார்.

2½ லட்சம் பேருக்கு வேலை

அப்போது அவர், ‘கடந்த 2005-ம் ஆண்டு 50 பேருடன் சென்னையில் தொடங்கப்பட்ட அமேசான் நிறுவனம் தற்போது 21 லட்சம் சதுர அடி பரப்பளவில் 14 ஆயிரம் பேர் பணியாற்றும் நிறுவனமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இந்த புதிய அலுவலகம் இந்தியாவின் 2-வது மிகப்பெரிய அமேசான் அலுவலகம் ஆகும்.

அமேசான் நிறுவனம் மூலம் 2025-ம் ஆண்டில் இந்தியாவில் நேரடி மற்றும் மறைமுகமாக 2½ லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெறுவர்' என்றார்.

விழாவில் தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோதங்கராஜ், முதன்மை செயலாளர் நீரஜ் மிட்டல், அமேசான் குளோபல் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் இயக்குனர் வினோத் மேத்யூஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

மகிழ்ச்சி அடைகிறேன்

அமேசானின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்தது குறித்து மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அமேசான் நிறுவனத்தின் தமிழகத்தின் மிகப்பெரிய அலுவலகமும், இந்தியாவின் 2-வது மிகப்பெரிய அலுவலகமுமான இந்த புதிய அலுவலகத்தை திறந்து வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

இது ஒரு லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கிய தமிழக பயணத்தின் மற்றொரு மைல்கல் ஆகும். தமிழகத்தில் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவற்றுக்கான அமேசான் நிறுவனத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை எதிர்நோக்குகிறோம்' என்று கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்