காதலிக்க மறுத்த மாணவி மானபங்கம் 2 என்ஜினீயர்களுக்கு தலா ஓராண்டு சிறை புதுவை கோர்ட்டு தீர்ப்பு
காதலிக்க மறுத்த மாணவியை மானபங்கம் செய்த வழக்கில் என்ஜினீயர்கள் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
புதுச்சேரி
காதலிக்க மறுத்த மாணவியை மானபங்கம் செய்த வழக்கில் என்ஜினீயர்கள் 2 பேருக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதித்து புதுவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
மாணவி மானபங்கம்
லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி கடந்த 2017-ம் ஆண்டு விடுமுறைக்காக திண்டிவனம் பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த தமிழ் என்கிற தமிழரசன் (32) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.
என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். விடுமுறை முடிந்தபின் அந்த மாணவி புதுவைக்கு வந்துள்ளார். அப்போது தமிழரசன் செல்போனில் அந்த மாணவியிடம் பேசியுள்ளார்.
பின்னர் புதுவைக்கு வந்த தமிழரசன் அந்த மாணவி படிக்கும் பள்ளிக்கு சென்று நீ என்னை காதலிக்க வேண்டும். இல்லை என்றால் உனது பாட்டியை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். மேலும் அந்த மாணவியின் கையை பிடித்து இழுத்து மானபங்கம் செய்தார். அப்போது அவரது நண்பர் என்ஜினீயர் வினோத் (32) என்பவர் உடன் இருந்தார்.
ஓராண்டு சிறை தண்டனை
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி இது குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதார். அவர்கள் லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன், வினோத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு புதுவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடந்தது.
விசாரணை முடிவடைந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட தமிழரசன், வினோத் ஆகிய 2 பேருக்கும் தலா ஓராண்டு சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பாலமுருகன் ஆஜரானார்.