பிரெஞ்சிந்திய விடுதலை கால இயக்கத்தினர் உண்ணாவிரதம்
தியாகி பென்ஷன் வழங்கக்கோரி பிரெஞ்சிந்திய விடுதலை கால இயக்கத்தினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
பிரெஞ்சு குடியுரிமையை இழந்த புதுச்சேரி பூர்வீக குடிமக்களுக்கு மத்திய தியாகி பென்ஷன் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரெஞ்சிந்திய புதுச்சேரி பிரதேச விடுதலை கால மக்கள் நல நற்பணி இயக்கத்தினர் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள புதுவை சிவம் சிலையருகில் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு இயக்க தலைவர் சிவராஜ் தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் அருணாசலம், சுப்பிரமணியன், புருஷோத்தமன் உள்பட பலர் கலந்துகொண்டனர். பிரெஞ்சு குடியுரிமையை இழந்தவர்களுக்கு பென்சன் வழங்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியும், புதுவை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் வரும்காலங்களில் முறையான விசாரணை நடத்தி பிரெஞ்சு குடியுரிமையை இழந்தவர்களுக்கு பென்ஷன் வழங்க கவர்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் அறிவுறுத்தப்பட்டது.