மேட்டூர் அணை நீர்மட்டம் 104.90 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி வினாடிக்கு 2,671 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சேலம்,
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி மாலையில் நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி 1-ந் தேதி முதல் காவிரி டெல்டா மாவட்ட மக்களின் குடிநீர் தேவைக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 2,671 கன அடி வீதம் வந்த தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று காலையில் 104.82 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் 104.90 அடியாக உயர்ந்தது. அணையில் தற்போது 71.40 டி.எம்.சி. நீர் இருப்பு உள்ளது.