சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? எடப்பாடி பழனிசாமி பேட்டி

சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தது ஏன்? என்பதற்கு எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.

Update: 2022-03-23 22:12 GMT
சென்னை,

சட்டசபையில் நேரமில்லா நேரத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். அவரது சில கருத்து அவைக்குறிப்பில் நீக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சட்டசபையில் இருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டசபை வளாகத்தில் நிருபர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து குறிப்பாகப் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர் கதையாக உள்ளது. 10 ஆண்டுக் கால அ.தி.மு.க. ஆட்சியில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், கண்டுபிடித்து, சட்டத்தை முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தந்தோம்.

இது போன்ற குற்றங்களை, காவல் துறை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும் எனக் கேட்டுள்ளோம். சென்னையில், ஓய்வு பெற்ற நீதிபதி பி.டி. செல்வத்தின் பாதுகாவலருக்கே அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

10 ஆண்டுக்காலம், சட்டசபையில் பேரவை விதி 110-ன் கீழ், பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டோம். அந்த அறிவிப்புகள் நடைமுறைக்கு வந்தது. இதையெல்லாம் முதல்-அமைச்சர் மறைத்து விட்டு ஒரு சில அறிவிப்புகள் நிறைவேற்றப்படவில்லை எனக் கூறுகிறார். சில பிரச்சினைகள் காரணமாக அவை நிறைவேற்றப்படவில்லை.

வெளிநடப்பு

வேண்டுமென்றே அ.தி.மு.க. அரசு எதையும் செய்யவில்லை என்ற தோற்றத்தை உருவாக்கி உள்ளார். அ.தி.மு.க. ஆட்சியில் மடிக்கணினி திட்டம் இந்த பட்ஜெட்டில் இல்லை. தாலிக்குத் தங்கம் அற்புதமான திட்டத்தை கைவிட்டுவிட்டார்கள். கிராமப்புறங்களில், பசுமாடு வழங்கும் திட்டம், 3 லட்சம் பேருக்கு, மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் என மக்களுக்குப் பயன்பட்ட அனைத்து திட்டத்திற்கும் மூடு விழா கண்டு விட்டார்கள்.

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும், சட்டம்-ஒழுங்கு சீர் குலைந்து விட்டது. ரவுடிகள் சுதந்திரமாகச் சுற்றி வருகின்றனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பாலியல் குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருவதால் நாங்கள் வெளிநடப்பு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்