திருவண்ணாமலை: தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி..!

திருவண்ணாமலை அருகே பள்ளிக்கு சென்ற முதல் நாளே தனியார் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-03-18 11:45 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் அருகே உள்ள கொருக்காத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (45) நெசவு தொழிலாளி, இவரது மனைவி ராணி (37). இவர்களுக்கு விக்னேஷ் (7), சர்வீஸ் (4) என்ற இரு மகன்கள் உள்ளனர்.  இதில் விக்னேஷ் கொருகாத்தூர் அருகே வாழைப்பந்தல் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் பெற்றோர்கள் விக்னேஷ் படிக்கும் அதே பள்ளியில் தனது இரண்டாவது மகனை நேற்று காலை பள்ளிக்கு சென்று எல்.கே.ஜி. வகுப்பில் சேர்த்து விட்டு வீடு திரும்பினர். பின்னர் மாலையில் சர்வேஷ் மற்றும் விக்னேஷ் சக மாணவருடன் பள்ளி வேனில் வீடு திரும்பினர். 

அப்போது வழக்கம்போல் அரசு மேல்நிலைப் பள்ளி எதிரே நிறுத்தி மாணவர்கள் இறக்கினார்கள். சர்வேஷ் இறங்குவதற்குள் கவனக்குறைவாக டிரைவர் வேனை  முன்பக்கமாக இயக்கியுள்ளார். இதில் பின் சக்கரத்தில் சிக்கி சர்வேஷ் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இதுகுறித்து தகவல் அறிந்த சேத்துப்பட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சிசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் தனியார் பள்ளி வேன் ஓட்டுநரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். பள்ளிக்கு சென்ற முதல் நாளே சிறுவன் உயிரிழந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்