சாத்தூர்: ஆண் குழந்தை விற்பனை செய்த வழக்கில் 6 பேர் மீது வழக்கு பதிவு..!
சாத்தூர் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருதுநகர்,
சாத்தூர் அருகே குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குழந்தை விற்பனை
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே உள்ள அப்பையநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுந்தரலிங்கம்-கோமதி தம்பதியினர்.இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால் இவர்களது உறவினர் மகேஸ்வரி என்பவர் மூலமாக சேலம் மாவட்டம் புளியங்காடைச் சேர்ந்த அண்ணாமலை, அம்பிகா தம்பதிக்கு மூன்றாவதாக பிறந்த ஆண் குழந்தையை கேட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து அண்ணாமலை-அம்பிகா தம்பதி கடந்த 09 டிசம்பர் 2019 அன்று ரூ. 45,000/- க்கு தங்களது மூன்றாவது ஆண் குழந்தையை விற்பனை செய்துள்ளனர். பின்னர் விற்பனை செய்த சில மாதங்களிலேயே தனது குழந்தையை திரும்ப கேட்டுள்ளனர். குழந்தையை சுந்தரலிங்கம்-கோமதி தம்பதியினர் திரும்ப தர மறுக்கவும் போலீசில் புகார் அளிப்பதாக கூறியுள்ளார்.
டி.என்.ஏ. பரிசோதனை
இதற்கு பயந்த சுந்தரலிங்கம் குழந்தையை மதுரையிலுள்ள ஒரு காப்பகத்தில் விட்டுவிட்டார். அதன்பின்னர் குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று கேட்டபோது குழந்தை உங்களோடது தான் என்பதற்கு என்ன சாட்சி உள்ளது என்று கேட்டு குழந்தையை தர மறுத்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து டி.என்.ஏ. பரிசோதனை மூலம் குழந்தை தங்களுக்கு சொந்தமானது என்று நிரூபித்துள்ளனர்.
வழக்குப்பதிவு
இதுகுறித்த விசாரணையில் குழந்தையை விற்ற சம்பவம் தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மீனாட்சி அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட அண்ணாமலை-மகேஸ்வரி மற்றும் குழந்தையை வாங்கிய சுந்தரலிங்கம்-கோமதி தம்பதியினர் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அப்பையநாயக்கன்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தையை விற்பனை செய்தது குறித்து முழுமையான விசாரணைக்கு பின்னர் குழந்தை விற்பனையில் ஈடுபட்ட 6 பேரையும் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளன.