“தமிழக பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது” - எடப்பாடி பழனிசாமி

பெட்ரோல், டீசல் விலை குறைப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டினார்.

Update: 2022-03-18 07:23 GMT
சென்னை,

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச அனுமதி கோரினார். சபாநாயகர் நிராகரித்ததால் அவையில் அ.தி.மு.க.எம்.எல்.ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் மீதான கைது, ரெய்டு நடவடிக்கைகளுக்கு கண்டனம் தெரிவித்து அதிமுகவினர் கோஷம் எழுப்பினர். அதனை தொடர்ந்து பட்ஜெட் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் மக்களுக்கு ஏமாற்றமே. கல்விக்கடன் தள்ளுபடி குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லை. மகளிருக்கு உரிமைத்தொகையும் தள்ளிபோடப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

திமுக ஆட்சியில் வருமானம் அதிகரித்த நிலையிலும் அதிக கடன் வாங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததால் தான் அதிமுக ஆட்சியில் வருவாய் குறைந்திருந்தது. அதிமுக ஆட்சியில் மூலதன செலவுகளுக்காகவே கடன் பெற்றோம். கொரோனா காலத்தில் அரசுக்கு வருவாயே கிடைக்கவில்லை.

திமுக ஆட்சிக்கு வந்த உடன் வருவாய் வழிகள் இயல்பு நிலைக்கு திரும்பின. வருவாய் அதிகரித்துள்ள நிலையில், கடன் குறைந்திருக்க வேண்டும், ஆனால் குறையவில்லை, அரசு சரியாக செயல்படவில்லை.

திமுக ஆட்சிக்கு பின் 2021-2022-ல் 1.08 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது, ஆனால் முக்கிய திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்