சட்டசபை நோக்கி அரசு ஊழியர்கள் ஊர்வலம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை நோக்கி அரசு ஊழியர்கள் ஊர்வலம் சென்றனர்.

Update: 2022-03-17 17:54 GMT
மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய 14 அம்ச கோரிக்கைகள் மற்றும் மாநில அரசு நிறைவேற்ற வேண்டிய 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி அரசு ஊழியர் சம்மேளனத்தினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று மறைமலை அடிகள் சாலைகளில்  இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்துக்கு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். கவுரவ தலைவர் பாலமோகனன், பொதுச்செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் அண்ணாசாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை அருகே சென்றது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். முதல்-அமைச்சரை சந்திக்க முக்கிய நிர்வாகிகள் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். இதன்பின் மற்றவர்கள் கலைந்துசென்றனர். ஊர்வலத்தில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

மேலும் செய்திகள்