ஏப்ரல் 1 ந் தேதி முதல் அமலாகிறது: முக்கிய சாலைகளில் வாகனம் நிறுத்த கட்டணம் புதுச்சேரி நகராட்சி அதிரடி
புதுவை நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டணம் வசூலிக்க நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரி
புதுவை நகரப்பகுதியில் முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த ஏப்ரல் 1-ந் தேதி முதல் கட்டணம் வசூலிக்க நகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
வருமானத்தை உயர்த்த...
புதுவையில் நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளின் ஊழியர்களுக்கு அவற்றின் வருவாயிலிருந்து சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அதன் மூலம் வரும் வருவாய் போதாத நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினைகள் உள்ளன. இதனால் பிற அரசு ஊழியர்களைப்போல் தங்களுக்கும் அரசே சம்பளம் வழங்கவேண்டும் என்று ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால் தற்போதைய நிதிநிலையில் அரசால் அது முடியாத காரியமாக உள்ளது. எனவே நகராட்சியே தங்களுக்கான வருமானத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அதற்காக முக்கிய சாலைகளில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த பணியை தனியாரிடம் விட டெண்டரும் விடப்பட்டுள்ளது.
எந்தெந்த பகுதிகளில் நிறுத்த கட்டணம்
இதன்படி கடலூர் சாலை புரோவிடன்ஸ் மால் எதிரில் சிங்காரவேலர் திடல் பகுதி, நேரு வீதியில் ராஜா தியேட்டர் முதல் போக்குவரத்து காவல்நிலையம் வரையிலும், அண்ணா சாலையில் அண்ணா சதுக்கம் முதல் ராஜா தியேட்டர் சிக்னல்- அதிதி ஓட்டல் சந்திப்பு வரையிலும், பாரதி பூங்கா மற்றும் அரசு ஆஸ்பத்திரியை சுற்றிய பகுதிகள், தூய்மா வீதி, ரோமண்ரோலண்ட் வீதி, செயிண்ட் லூயி வீதி, தெற்கு புல்வார்டு பகுதியில் டூப்ளக்ஸ் சிலை முதல் சோனாம்பாளையம் சந்திப்பு வரை.
எஸ்.வி.பட்டேல் சாலையில் அதிதி ஓட்டல் முதல் பழைய சாராய ஆலை வரை, அண்ணா சிலை முதல் சோனாம்பாளையம் சந்திப்பு வரை, பெரிய வாய்க்காலின் மேல்பகுதி, தாவரவியல் பூங்காவிற்கு வடக்கு மற்றும் நியூடோன் தியேட்டர் அருகில் உள்ள பகுதிகள், இந்திராகாந்தி சிலையிலிருந்து வாசன் கண் மருத்துவமனை வரை, 100 அடி ரோடு பாலம் முதல் போக்குவரத்து துறை உள்ள காலியிடம், பாண்டி மெரினாவில் உள்ள காலியிடம் ஆகிய பகுதிகளில் நிறுத்தப்படும் அனைத்து வாகனங்களுக்கும் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது.
மோட்டார் சைக்கிளுக்கு 10 ரூபாய்
இதற்கான ஏலம் இணையதளம் மூலம் வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதுதவிர பஸ்நிலையத்துக்கு வரும் பஸ்களுக்கான தொகை வசூல், அடிக்காசு வசூல் உள்ளிட்டவை தொடர்பான பணிகளுக்கும் ஏலம் நடக்கிறது. இதுதொடர்பான அறிவிப்பினை புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் வெளியிட்டுள்ளார்.
இதன்படி மோட்டார் சைக்கிளுக்கு ரூ.10-ம், கார்களுக்கு ரூ.30-ம், கனரக வாகனங்களுக்கு ரூ.40-ம் நாளொன்றுக்கு வசூலிக்கப்பட உள்ளது. இந்த கட்டணத்தை வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் அமல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பொதுமக்கள் எதிர்ப்பு
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் கட்டணம் வசூலிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பொதுமக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பு காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.