பக்தர்கள் எதிர்பார்ப்பு நிறைவேறியது: திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் செல்ல அனுமதி..!!

திருவண்ணாமலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் அனுமதி அளித்துள்ளார்.

Update: 2022-03-15 05:56 GMT
திருவண்ணாமலை, 

தமிழகத்தில் உள்ள முக்கிய ஆன்மிக தலங்களில் திருவண்ணாமலையும் ஒன்றாகும். இங்குள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பவுர்ணமி கிரிவலத்திற்கு புகழ் பெற்றது. ஒவ்வொரு மாத பவுர்ணமி அன்றும் இங்குள்ள மலையை பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரையாக சென்று கிரிவலம் செல்கிறார்கள். அன்றை தினம் திருவண்ணாமலை நகரமே விழாக்கோலமாக காட்சி அளிக்கும். விடுமுறை தினத்திலும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். 

இந்த சூழலில் தமிழகத்தில் கொரோனா பரவலை தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில் தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ள நிலையில் திருவண்ணாமலையில் பக்தர்கள் மீண்டும் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருவண்ணாமலைகலெக்டர் முருகேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கையாக பவுர்ணமி தினங்களில் கிரிவலம் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை  அரசால் நீக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து இந்தமாதம் (பங்குனி)பவுர்ணமி தினங்களான வருகிற 17 மற்றும் 18- ஆம் தேதிகளில் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

கிரிவலம் செல்ல வருகை தரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள கொரோனா நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கட்டாயம் முடக்கவும் அணிந்து வரவேண்டும் என்று  அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் கோர்ட் உத்தரவின் பேரில் கடந்த கார்த்திகை மாத பவுர்ணமி நாட்களில் மட்டும் 20 ஆயிரம் பக்தர்கள் கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதன் பின்னர் தற்போதுதான் கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து பவுர்ணமி  கிரிவலம் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தங்கள் நீண்ட நாள் எதிர்பார்ப்பு நிறைவேற உள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எனவே வருகிற பவுர்ணமி கிரிவல நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்