சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் பக்தர்களுக்கு அனுமதி!! - மாவட்ட நிர்வாகம்
சதுரகிரி கோவிலுக்கு செல்ல நாளை முதல் 4 நாட்கள் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கி உள்ளது
வத்திராயிருப்பு,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், அமாவாசை, பவுர்ணமி ஆகிய நாட்களில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்தநிலையில் பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு நாளை முதல் 15-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் கோவிலுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
பக்தர்கள் காலை 7 மணி முதல் மதியம் 11 மணிவரை மட்டுமே மலை ஏற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை, கோவில் நிர்வாகம் செய்து வருகிறது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல பக்தர்கள் இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்குவதற்கும் கோவில் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் காய்ச்சல், கபம், இருமல் உள்ளவா்களுக்கும், 10 வயதுக்குள்பட்டோருக்கும், 60 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கும் அனுமதியில்லை. கோவிலுக்கு வருபவா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். உடல் வெப்பநிலைப் பரிசோதனைக்குப் பிறகே பக்தா்கள் மலையேற அனுமதிக்கப்படுவா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.