கள்ளக்காதலை கண்டித்ததால் விபரீதம்: பெட்ரோல் ஊற்றி லாரி டிரைவர் எரித்துக்கொலை

கள்ளக்காதலை கண்டித்ததால் லாரி டிரைவரை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற மனைவியையும், மகளையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-03-13 20:18 GMT
ராமநாதபுரம்,

ராமநாதபுரம் அருகே உள்ள ஆர்.காவனூர் ஆசாரி மடத்தை சேர்ந்தவா் ரவி (வயது 53). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு பாக்கியம்(51) என்ற மனைவியும், பவித்ரா (26) என்ற மகளும் உள்ளனர்.

பவித்ராவை உச்சிப்புளி அருகே முத்துக்குமார் என்பவருக்கு திருமணம் செய்துகொடுத்து 7 வயதில் ஒரு மகனும், 5 வயதில் ஒரு மகளும் உள்ளனர். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வந்து குழந்தைகளுடன் பெற்றோருடன் பவித்ரா வசித்து வந்துள்ளார். மேலும் தாய் பாக்கியத்துடன் செங்கல்சூளைக்கு வேலைக்கு சென்று வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 8-ந் தேதி ரவி வீட்டில் தனியாக இருந்தபோது உடலில் தீப்பற்றி உடல் கருகிய நிலையில் அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ரவி உயிரிழந்தார். குடும்ப பிரச்சினை காரணமாக குடிபோதையில் தற்கொலை செய்து கொண்டதாக முதலில் கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

முன்னுப்பின் முரணாக தகவல்

விசாரணையில் மனைவி பாக்கியம் மற்றும் மகள் பவித்ரா ஆகியோர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் தெரிவித்தனர். மேலும் போலீசார் அவர்களின் ஊரிலும், அக்கம்பக்கத்திலும் விசாரித்தனர்.

அப்போது அந்த ஊரை சேர்ந்த சிறுவன் ஒருவன் போலீசாரிடம், ஒரு பாட்டிலில் பவித்ரா பெட்ரோல் வாங்கி வந்ததாக தெரிவித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அதுகுறித்து விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் வெளியானது.

எரித்துக்கொலை

பவித்ரா தனது தாயுடன் செங்கல்சூளைக்கு சென்ற நிலையில் அங்கு செங்கல் லோடு ஏற்ற வந்த இடையர்வலசையை சேர்ந்த முருகானந்தம் (42) என்ற லாரி டிரைவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை தாய் பாக்கியம் கண்டுகொள்ளாமல் இருந்தாராம். ஆனால் ரவி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த தாயும், மகளும் ரவியை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர்.

நள்ளிரவில் தூங்கும்போது ரவியை உயிரோடு எரித்துகொன்றுவிடுவது என்று திட்டமிட்டு உள்ளனர். இதன்படி கடந்த 8-ந் தேதி இரவு ரவி குடிபோதையில் தூங்கி கொண்டிருந்தபோது தாயும், மகளும் பெட்ரோலை ஊற்றி உயிரோடு தீ வைத்துவிட்டு தப்பி சென்றுவிட்டனர். உடலில் தீப்பற்றிய ரவி கதறிய நிலையில் அக்கம்பக்கத்தினர் வந்து தீயை அணைத்துள்ளனர். அப்போது மகள் பவித்ரா, தாய் பாக்கியம் ஆகியோர் பதறி அடித்து கொண்டு ஓடி வந்துள்ளனர்.

அதிர்ச்சி

அந்த நேரத்தில் கள்ளக்காதலன் முருகானந்தம் ரவியை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளார். இவை எல்லாம் தாய், மகள், கள்ளக்காதலன் ஆகியோர் சேர்ந்து திட்டமிட்டு நடத்திய கொலை சதிதிட்டம் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

இதையடுத்து மனைவி பாக்கியம், மகள் பவித்ரா, கள்ளக்காதலன் முருகானந்தம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

பவித்ரா உடல்நிலை பாதிக்கப்பட்டதால் போலீஸ் பாதுகாப்புடன் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்