மாத்தூர் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் தொழிலதிபர்-என்ஜினீயர் சாவு

மாத்தூர் அருகே கார் மீது பஸ் மோதிய விபத்தில் படுகாயமடைந்த தொழிலதிபர், என்ஜினீயர் ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2022-03-13 18:35 GMT
ஆவூர்:
கார் மீது பஸ் மோதல் 
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்த சுரேஷ் மகன் அருண் (வயது 28). சாப்ட்வேர் என்ஜினீயரான இவர் அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார். தற்போது விடுமுறையில் சிவகாசிக்கு வந்திருந்தார். 
இவரும், அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான தொழிலதிபர்கள் போஸ் மகன் டேனியல் (27), பராசக்திவேல் மகன் மோகன் (27) ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் மதியம் தஞ்சாவூரில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்திற்கு சிவகாசியில் இருந்து காரில் புறப்பட்டு புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை ஒன்றியம், மாத்தூர் ரிங் ரோடு வழியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மாத்தூர் மின்வாரிய அலுவலகம் அருகே சென்றபோது திருச்சியில் இருந்து ஆவூரை நோக்கி சென்ற தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக அந்த கார் மீது மோதியது. 
2 பேர் சாவு 
இதில் காரில் பயணம் செய்த 3 பேர், பஸ் பயணிகள் 3 பேர் உள்பட 6 பேர் காயமடைந்தனர். இதில் படுகாயமடைந்த காரில் சென்ற அருண், டேனியல், மோகன் ஆகிய 3 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி டேனியல், அருண் ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இதுகுறித்த புகாரின்பேரில் மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் தொண்டைமான் நல்லூரை சேர்ந்த சாமிநாதன் மகன் சிவகுமார் (26) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்