திருச்சி-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி ரெயிலில் பொதுப்பெட்டிகள் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளாக மாற்றம்
திருச்சி-திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் இன்டர்சிட்டி ரெயிலில் பொதுப்பெட்டிகள் 2-ம் வகுப்பு முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளன.
மதுரை,
திருச்சியில் இருந்து மதுரை வழியாக திருவனந்தபுரம் வரை பகல்நேர இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயிலில் (வ.எண்.22627/22628), பொதுப்பெட்டிகள் இரு மார்க்கங்களிலும் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட உள்ளன.
அதாவது, இந்த ரெயிலில் 3 பொதுப்பெட்டிகள் 2-ம் வகுப்பு இருக்கை வசதி முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. அதன்படி, திருச்சியில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் வருகிற 19-ந் தேதி முதலும், திருவனந்தபுரத்தில் இருந்து இயக்கப்படும் ரெயிலில் வருகிற 20-ந் தேதி முதலும் இந்த பெட்டிகள் மாற்றப்படுகின்றன. அதனை தொடர்ந்து, இந்த ரெயிலில் இனிமேல், ஒரு குளிரூட்டப்பட்ட இருக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 8 பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகள் பெட்டியுடன் கூடிய பார்சல் பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும்.
அதேபோல, சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரசில் பயணிகளின் வசதிக்காக தற்காலிகமாக ஒரு 2-ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து குருவாயூர் செல்லும் ரெயிலில் (வ.எண்.16127) வருகிற 17-ந் தேதியும், குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரசில் (வ.எண்.16128) வருகிற 18-ந் தேதி வரையும் இந்த கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டிருக்கும். எனவே, இந்த ரெயிலில் ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், ஒரு பார்சல் பெட்டியுடன் இணைந்த இருக்கை வசதி பெட்டி மற்றும் ஒரு பார்சல் பெட்டியுடன் இணைந்த மாற்றுத்திறனாளி பெட்டி ஆகியன இணைக்கப்பட்டிருக்கும்.