தெலுங்கானாவில் கவர்னர் உரையின்றி சட்டசபை கூட்டம்: “மக்களுக்காக பெரிதுபடுத்தவில்லை” - தமிழிசை சவுந்தரராஜன்
தெலுங்கானாவில் கவர்னர் உரையின்றி சட்டசபை கூட்டம் நடைபெற்றது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
கோவை,
தெலுங்கனா மாநில கவர்னரும், புதுச்சேரி மாநில துணை நிலை கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை 10 மணி அளவில் விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர் கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
கொரோனா இல்லாத நாடாக இன்று இந்தியா உள்ளது. அதற்கு காரணம் 180 கோடி தடுப்பூசி போட்டதால் தான். மேலும் மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பு தான். இருந்தபோதிலும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைவரும் முககவசம் கட்டாய அணிய வேண்டும். தெலுங்கானவில் கவர்னர் உரையில்லாமல் சட்டமன்றம் தொடங்கி இருக்கிறது. அதனை பெரிது படுத்தவில்லை.. மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன். மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதனால் அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.
ஒரே நாடு... ஒரே தேர்தல்... குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை.
நான் ஒரு சாதாரண குடிமகள் அவ்வளவு தான்.
மார்ச் 27-ந் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தில் விமான சேவை தொடங்க இருக்கிறது.
அதற்கு பிரதமருக்கும், விமான துறை மந்திரிக்கும் நன்றி.
புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம். இதற்கு நாங்கள் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டோம்.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி சுற்றுலாதுறை வளர்ச்சியடைவதற்கும். புதுச்சேரியையொட்டி உள்ள கடலூர், நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையும்.
புதுச்சேரி - பெங்களூர்
பெங்களூர் - ஹைதராபாத் நகருக்கும் நான் முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன்.
இவ்வாறு கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
முன்னதாக ஜனாதிபதி பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லபடுகிறது என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை.