திருக்கனூர் அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்ற கும்பல் சிக்கியது
மாணவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
திருக்கனூர்
மாணவர்களுக்கு கஞ்சா வினியோகம் செய்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் ரோந்து பணி
திருக்கனூர் அருகே சுத்துக்கேணி ஏரிக்கரை பகுதியில் இளைஞர்களுக்கும், பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கும், ஒரு கும்பல் கஞ்சா விற்பனை செய்வதாக காட்டேரிக்குப்பம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
போலீசாரை கண்டவுடன் அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் நின்று கொண்டிருந்த 4 பேரும் ஓட்டம் பிடித்தனர். இருப்பினும் அவர்களை போலீசார் விரட்டி சென்று மடக்கி பிடித்து சோதனை செய்தபோது அவர்களிடம் ½ கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
கஞ்சா பறிமுதல்
இதையடுத்து 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் சென்னை வியாசர் பாடியை சேர்ந்த சஞ்சய் (வயது28), அஜீத் குமார் (22) சுத்துக்கேணி அம்பேத்கர் வீதியை சேர்ந்த அருள் (22) மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த குறளரசன் (22) என்பதும் கிராமப்புற இளைஞர்களையும், மாணவர்களையும் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது.
இதைதொடர்ந்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள், 1/2 கிலோ கஞ்சா, ரூ.500 பறிமுதல் செய்தனர். இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.