காரைக்கால் பகுதியில் ஆடுகள் திருடிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
காரைக்கால் பகுதியில் ஆடுகள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால்
காரைக்கால் பகுதியில் ஆடுகள் திருடிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆடுகள் திருட்டு
காரைக்கால் மாவட்ட நகர் பகுதி மற்றும் கிராமப் பகுதிகளில், மேய்ச்சலின்போதும் வீடு, சாலைகளில் படுத்து இருக்கும் ஆடுகள் சமீபகாலமாக திருடு போய் வந்தது.
இதுதொடர்பாக அடிக்கடி புகார்கள் வந்ததை தொடர்ந்து, மாவட்ட சீனியர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைதன்யா உத்தரவின் பேரில், போலீஸ் சூப்பிரண்டுகள் சுப்பிரமணியன், நிதின் கவுல் ரமேஷ் தலைமையில் போலீசார் ரோந்து பணியை முடுக்கி விட்டனர்.
இந்தநிலையில், காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் மேற்கு புறவழிச்சாலை ஜிப்மர் கட்டிடம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்தவழியாக மோட்டார் சைக்கிளில் 3 ஆடுகளை தூக்கிச் சென்ற 2 பேரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் தெரிவித்ததால் மேலும் சந்தேகமடைந்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்று உரிய முறையில் விசாரணை நடத்தினர்.
2 பேர் பிடிபட்டனர்
இதில், பிடிபட்டவர்கள், காரைக்கால் புதுத்துறை டைமண்ட் நகரைச்சேர்ந்த அலீல் ரகுமான் (வயது 20), பெரியபேட் மாரியம்மன் கோவில் தெருவைச்சேர்ந்த கார்த்திகேயன் (20) என்பதும், 3 ஆடுகளை திருடிக் கொண்டு வந்ததையும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 ஆடுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.