தமிழக மாணவர்கள் மீட்பு: மத்திய மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி

உக்ரைனில் சிக்கித்தவித்த இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டதற்கு, மத்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்

Update: 2022-03-12 06:36 GMT
சென்னை, 

உக்ரைன் நாட்டில் சிக்கித்தவித்த தமிழக மாணவர்கள் உள்ளிட்ட இந்திய மாணவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்டதற்காக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு, முதல்-அமைச்சர்  தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

உக்ரைன் நாட்டில் இருந்து தமிழக மாணவர்களின் கடைசி குழு இன்று திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் மாணவர் குழுவை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வரவேற்றார்.

அதன் பின்னர் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுப்பிரமணியனிடம், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழக மாணவர்கள் அனைவரும் பாதுகாப்பாக திரும்ப நடவடிக்கை மேற்கொண்ட மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கும் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்