உக்ரைனில் இருந்து வளர்ப்பு நாய்களுடன் நாடு திரும்பிய ஊட்டி மாணவி...!
உக்ரைனில் இருந்து வளர்ப்பு நாய்களுடன் ஊட்டி மாணவி நாடு திரும்பி உள்ளார்.
ஊட்டி,
உக்ரைன்- ரஷியா இடையே போர் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வருகின்றது. இதனால் அங்கு சிக்கி உள்ள இந்திய மாணவர்களை மீட்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்துவருகின்றது. அந்த வகையில் இந்த திட்டத்துக்கு ஆபரேஷன் கங்கா என்று பெயரிட்டு மத்திய அரசு விரைந்து செயல்பட்டு வருகின்றது. இந்த முயற்சியால் பல மாணவர்கள் நாடு திரும்பி உள்ளனர்.
அந்த வகையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கேத்தி பாலாடாவை சேர்ந்தவர் பாபு. இவரது மகள் ஆர்த்தி உக்ரைன் கிவ் பகுதியில் எம்.பி.பி.எஸ். 5-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். தற்போது இந்த போருக்கு நடுவே தனது 2 வளர்ப்பு நாய்களுடன் மாணவி ஆர்த்தி சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
இதுகுறித்து மாணவி ஆர்த்தி கூறியதாவது:-
உக்ரைனில் போர் காரணமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டேன். கிவ் பகுதியில் இருந்து 10 நாட்கள் வெளியேற முடியாமல் கட்டிடத்தின் அடியில் தஞ்சமடைந்தேன். அங்கு இந்திய மாணவர்களும் உடனிருந்தனர். அங்கிருந்து மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு சென்ற போது தாக்குதல் நடந்ததால், மீண்டும் பழைய இடத்துக்கு வந்தோம்.
உணவு, தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டேன். பின்னர் ரெயில் மூலம் ஹங்கேரி எல்லைப் பகுதிக்கு வந்தேன். நான் கல்லூரியில் படிக்கும்போது 2 வளர்ப்பு நாய்களை வாங்கி வளர்த்தேன். பெற்றோர்கள் வளர்ப்பு நாய்களை அங்கேயே விட்டு வரும்படி கூறினர். அதற்கு நான் வளர்ப்பு நாய்களுடன் தான் வருவேன் என்று தெரிவித்தேன்.
முதலில் விமானத்தில் டெல்லி வருவதற்கு வளர்ப்பு நாய்கள் இருந்ததால் அனுமதி தரவில்லை. பின்னர் அதற்காக தனி கூண்டு வாங்கி, அதில் அடைத்த பின்னர் அனுமதி கிடைத்தது. டெல்லியில் இருந்து ரெயில் மூலம் சென்னைக்கு வந்தேன். சொந்த ஊருக்கு திரும்ப டிக்கெட், உணவு போன்ற உதவிகளை செய்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. எனது மருத்துவ படிப்பு என்ன ஆகும் என்று தெரியவில்லை. எனவே, மருத்துவப் படிப்பை முடிக்க உதவி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நீலகிரிக்கு திரும்பிய மாணவர்கள் குறித்து அதிகாரி ஒருவர் கூறும்போது,
நீலகிரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 20 பேர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வந்தனர். போர்ச்சூழலில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. 20 பேரும் பாதுகாப்பாக மத்திய, மாநில அரசுகள் மூலம் சொந்த ஊருக்கு திரும்பி வந்து உள்ளனர் என்று தெரிவித்தார்.