காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா

காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் நேற்று தொடங்கியது.

Update: 2022-03-09 12:06 GMT
காரைக்கால், மார்ச்.9-
காரைக்கால் கைலாசநாதர் கோவில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
பிரம்மோற்சவ விழா
காரைக்கால் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 12 நாட்கள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் இன்று காலை நடைபெற்றது.
விழாவையொட்டி கொடி கம்பத்தின் அருகே சிறப்பு அலங்காரத்தில் சாமிகள் எழுந்தருளினர். சிறப்பு பூஜைகளுக்குப் பின், கொடிக்கம்பத்தில் சிவாச்சாரியார்கள் ரிஷப கொடி ஏற்றினர்.
தொடர்ந்து, பால், தயிர் மற்றும் மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட மங்கள பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர், பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்ரமணியர், கைலாசநாதர், சுந்தராம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.
17-ந் தேதி தேரோட்டம்
விழாவில், காரைக்கால் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. நாஜிம், அறங்காவலர் வாரிய தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
பிரம்மோற்சவ விழாவில் தினமும் காலை பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், மாலை பல்வேறு வாகனங்களில் சாமி வீதியுலா நடக்கிறது. 
முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 13-ந் தேதி வெள்ளி ரிஷபத்தில் சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரம்) நடைபெற உள்ளது. 17-ந் தேதி தேரோட்டமும், 20-ந் தேதி தெப்ப உற்சவமும், 21-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடக்கிறது. 
ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன் தலைமையில், அறங்காவல் குழுவினர், ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்