அனைத்து ரெயில்களிலும் இனி முன்பதிவில்லாத பெட்டிகள்...! எப்போது இருந்து தெரியுமா?
திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
சென்னை
அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களிலும் முன்பு போல முன்பதிவில்லாத பெட்டிகளில் பயணிகள் பயணிக்க ஏற்பாடு செய்ய ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.கொரோனா தொற்று காலத்திற்கு முன்பு அனைத்து ரெயில்களிலும் முன்பதிவில்லாத பெட்டிகள் இருந்தன.
ஒரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் 4 அல்லது 5 பெட்டிகள் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில் கொரோனா காலத்திற்கு பின்னர் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் நீக்கப்பட்டு, எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிப்போர் அனைவரும் முன்பதிவு செய்திட கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் கொரோனா தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதையடுத்து அனைத்து ரெயில்களிலும் முன்பு போல 2ம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகளை முன்பதிவு மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளாக இயக்கும்படி ரெயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.
அந்த வகையில், தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் உட்பட 192 விரைவு ரெயில்களில் மீண்டும் முன்பதிவில்லா பெட்டிகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல் ரெயில்வே கோட்டத்தில் இருந்து புறப்படும் யஷ்வந்த்புர் மற்றும் ஹூப்ளி விரைவு ரெயில்களில் முன்பதிவில்லா பெட்டி வரும் 10-ம் தேதி முதல் இயக்கப்படும். இதனைத்தொடர்ந்து நாகர்கோவில், முத்துநகர், உழவன் விரைவு ரயில்களில் ஏப்ரல் 1-ம் முதல் முன்பதிவில்லா பெட்டிகள் இணைக்கப்படும்.
ஏப்ரல் 16-ம் தேதி முதல், நெல்லை, குமரி, பாண்டியன், பொதிகை, ராமேஸ்வரம் உள்ளிட்ட ரயில்களில் முன்பதிவின்றி பயணிக்கலாம். இதன் மூலம் திருச்சி, மதுரை, சேலம், பாலக்காடு, திருவனந்தபுரம் உள்ளிட்ட 6 ரயில்வே கோட்டத்திலும் மொத்தமாக 192 விரைவு ரெயில்கள் முன்பதிவில்லா பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது.
இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எக்ஸ்பிரஸ் ரெயில்கள் புறப்படுவதற்கு முன்பு, அரை மணி நேரத்திற்கு முன்னதாக சென்று கூட, முன்பதிவில்லாத டிக்கெட்டுகளை பெற்றுக் கொண்டு பயணிக்க வசதிகள் இனிமேல் கிடைக்க வாய்ப்புள்ளது.