திருச்சியில் பரபரப்பு: தனியார் பஸ் டிரைவரை தாக்கிய போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர்
திருச்சியில் தனியார் பஸ் டிரைவரை போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் தாக்கியதால் தனியார் பஸ் டிரைவர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மேலூர் பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பவர் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து துவாக்குடி வரை தனியார் பஸ்சின் டிரைவராக பணியாற்றி வருகிறார். மேலும் இவர் திருச்சி மாவட்ட தனியார் பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இந்நிலையில் வழக்கம் போல இன்று பஸ்சை இயக்கிய அவர் திருச்சி மெயின்கார்டு கேட் பகுதியில் வந்த போது தனக்கு முன்னிருந்த ஆட்டோவை கடந்து செல்ல முற்பட்டார். அப்போது அவருக்கும் ஆட்டோ ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
அப்போது அங்கு இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் இருவரையும் சமாதானப்படுத்தும் போது தனியார் பஸ் ஓட்டுனர் செல்வத்துடன் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரன் தனியார் பஸ் ஓட்டுனர் செல்வத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவ இடத்தில் பின் தொடர்ந்து வந்த தனியார் பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் முனீஸ்வரனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த கோட்டை போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்தை நடத்தினர். பின்னர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பதாக கூறியதை அடுத்து அவர்கள் சமாதானம் அடைந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் ½ மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.