கவர்ச்சிகரமான சலுகை தருவதாக ரூ1.96 லட்சம் மோசடி
கவர்ச்சிகரமான சலுகை தருவதாக கூறி ரூ.1.96 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான சலுகை தருவதாக கூறி ரூ.1.96 லட்சம் மோசடி செய்ததாக பெண் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கவர்ச்சிகரமான சலுகை
புதுவை முருங்கப்பாக்கம் வில்லியனூர் ரோட்டை சேர்ந்தவர் ஜான்பால் துப்பியர் (வயது 40). இவருக்கு தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்த ஜேக்கப் வருண், சந்திரசேகர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். அவர்கள் தங்கள் நிறுவனத்தின் மேலாண் இயக்குனராக சிவநரேந்திரன் என்பவரும், முதன்மை செயல் அலுவலராக மெய்யழகன் என்பவரும், நிர்வாக பொறுப்புகளில் அருள் ஆதித்யா மற்றும் அவரது மனைவி ரேவதி ஆகியோர் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்பது உள்பட கவர்ச்சிகரமான சலுகைகள் வழங்குவதாகவும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளனர். இதையடுத்து ஜான்பால் துப்பியர், அவரது தம்பி சூசைராஜ் துப்பியர் ஆகியோர் அந்த நிறுவனத்தில் சிறுக சிறுக முதலீடு செய்தார்கள். அதற்கு அவ்வப்போது சிறுதொகையை அந்த நிறுவனத்தினர் வழங்கியதாக தெரிகிறது.
மோசடி வழக்கு
ஆனால் கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் இருந்து அந்த பணத்தையும் கொடுக்கவில்லை. அவர்களிடம் ஜான்பால் துப்பியர், அவரது தம்பி சூசைராஜ் துப்பியர் ஆகியோர் சேர்ந்து ரூ.1 லட்சத்து 96 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளனர். ஆனால் அந்த பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்துவிட்டதாக முதலியார்பேட்டை போலீசில் ஜான்பால் துப்பியர் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சிவநரேந்திரன், மெய்யழகன், அருள் ஆதித்யா, ரேவதி ஆகியோர் மீது மோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.