ராதாபுரம் தாசில்தாருக்கு பிடிவாரண்டு - கோர்ட்டு உத்தரவு
இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத ராதாபுரம் தாசில்தாகுக்கு பிடிவாரண்டு வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
நெல்லை,
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா லெவிஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஜோசப் விக்டர். இவர் கடந்த பிப்ரவரி மாதம் 4-ந்தேதி நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார்.
அதில், தனக்கு சொந்தமன இடம் கூட்டப்புளி சுனாமி காலனியில் 1.64 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த இடத்துக்கு செல்லும் பொது பாதையில் ஒருவர் இடையூறாக குடிசை அமைத்துள்ளார், இதனால் விவசாய பணிக்கு செல்ல முடியாததால் விவசாயப் பணி பாதிக்கப்பட்டு உள்ளது.
எனவே சுனாமி காலனி பொது பாதையை மீட்டு பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர ராதாபுரம் தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறி இருந்தார்.
இதனை தொடர்ந்து ராதாபுரம் தாசில்தாருக்கு கடந்த 17-ம் தேதி கோர்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அவர் ஆஜராகாததை தொடர்ந்து, அவருக்கு 2-வது முறையாக நேற்று கோர்ட்டு சம்மன் அனுப்பியது. ஆனால் அவர் கோர்ட்டில் ஆஜராகவில்லை.
இதையடுத்து நீதிபதி சமீனா, ராதாபுரம் தாசில்தாருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து இன்று உத்தரவிட்டு உள்ளார்.