அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய பெண் மாவோயிஸ்ட்; 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் உத்தரவு
அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கில் பெண் மாவோயிஸ்டை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்து ஊட்டி கோர்ட் உத்தரவிட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நெடுகல்கம்பை கிராமத்துக்கு கடந்த 1.4.2016-ந் தேதி மாவோயிஸ்டுகள் சிலர் வந்து சென்றனர். அவர்கள் கிராமத்தில் உள்ள பழங்குடியின மக்களிடம் அரசுக்கு எதிராகவும், சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று கூறி போஸ்டர்களை ஒட்டினர். மூளைச்சலவை செய்து இயக்கத்தில் சேர பேசி உள்ளனர். இதுகுறித்து கொலக்கம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இதற்கிடையே இந்த வழக்கில் கடந்த 9.11.2021-ந் தேதி அன்று கர்நாடகா மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்டு சாவித்திரியை கேரளா போலீசார் வயநாட்டில் கைது செய்தனர்.
பின்னர் அவர் திருச்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கு குறித்து சாவித்திரியிடம் விசாரணை நடத்த கொலக்கொம்பை போலீசார் ஊட்டி கோர்ட்டில் அனுமதி பெற்றனர். தொடர்ந்து போலீசார் திருச்சூர் சிறையில் இருந்து சாவித்திரியை ஊட்டிக்கு வாகனத்தில் அழைத்து வந்தனர். நேற்று நீதிபதி இல்லாததால் போலீசார் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் இன்று கோவை சிறையில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீசார் சாவித்திரியை அழைத்து வந்து ஊட்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
இவ்வழக்கில் அரசுக்கு எதிராக போஸ்டர் ஒட்டிய வழக்கில் மாவோயிஸ்டு சாவித்திரியை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் தரப்பில் நீதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி சாவித்திரியை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி அளித்தும், 3 நாட்களுக்கு பின் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்ந்து போலீசார் மாவோயிஸ்டு சாவித்திரியை குன்னூருக்கு அழைத்துச் சென்றனர். சம்பவம் நடந்த பகுதிக்கு அழைத்து சென்றும், ரகசிய இடத்தில் வைத்தும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.