நகைக்கடன் தள்ளுபடிக்கான பணத்தை கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனே வழங்க வேண்டும்

நகைக்கடன் தள்ளுபடிக்கான பணத்தை கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனே வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி உள்ளார்.

Update: 2022-03-02 21:38 GMT
சென்னை,

“கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று பொத்தாம் பொதுவாக வாக்குறுதி அளித்துவிட்டு ஆட்சிக்கு வந்த தி.மு.க., கடன் தள்ளுபடி கேட்டு விண்ணப்பித்த கிட்டத்தட்ட 49 லட்சம் பேரில் வெறும் 13 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி அறிவித்துவிட்டு மீதமுள்ள 36 லட்சம் பேர் கடன் பெற தகுதியற்றோர் என தெரிவித்தது.

கடன் தள்ளுபடி குறித்து வெளியிடப்பட்ட 2021-ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதியிட்ட அரசாணையில், நகைக்கடன் தள்ளுபடிக்காக ரூ.6 ஆயிரம் கோடி தோராயமாக செலவாகும் என்றும், 1-4-2021 முதல் மேற்படி அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாள் வரை அதற்குரிய வட்டியை அரசு ஏற்றுக்கொண்டு கூட்டுறவு நிறுவனங்களுக்கு தள்ளுபடி தொகையை வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இதற்கான நிதி ஒதுக்கீடு குறித்து மேற்படி அரசாணையில் ஏதும் குறிப்பிடப்படவில்லை.

இந்த சூழ்நிலையில், நகைக்கடன் தள்ளுபடிக்கு முன்பாக கூட்டுறவு சங்கங்களின் வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள நகைக்கடன்களுக்கான தொகையை அரசு முன்கூட்டியே தராவிட்டால் சங்கங்களின் சாவியை ஒப்படைக்கும் போராட்டம் நடத்தப்படும் என மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

வைப்புத்தொகை முதிர்ச்சி

பொதுமக்களின் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதில் தங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும், அதே சமயத்தில் அதற்கான பணத்தை சங்கங்களுக்கு அரசு முன்கூட்டியே தர வேண்டும் என்றும், அரசு நகைக்கடன் தள்ளுபடி அறிவித்த நாளில் இருந்தே வட்டி கட்டுவதை நகைக்கடன் வாங்கியோர் நிறுத்திவிட்டனர் என்றும், வட்டி மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்துத்தான் வங்கிகள் இயங்குகின்றன என்றும், 1-4-2021 முதல் அரசாணை பிறப்பிக்கப்பட்ட நாளான 1-11-2021 வரையிலான வட்டியை அரசே ஏற்றுக்கொள்ளும் என்று தெரிவித்த அரசு அதற்கு பிறகான வட்டியை பற்றி ஏதும் குறிப்பிடவில்லை என்றும் மேற்படி சங்கம் குறிப்பிட்டுள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி செய்ததே வெறும் 25 சதவீத நபர்களுக்குத்தான். அதிலும் பல்வேறு குளறுபடிகள். நகைக்கடன் தள்ளுபடி எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு கூட்டுறவு நிறுவனங்களில் பணிபுரிவோருக்கு சம்பளம் தருவதும், வைப்புத்தொகை முதிர்ச்சி அடைந்தவுடன் அதற்கான பணத்தை வட்டியுடன் வாடிக்கையாளர்களுக்கு திருப்பி அளிப்பதும் மிகவும் முக்கியம்.

கண்டனம்

நகைக்கடன் தள்ளுபடிக்கான பணத்தை தொடர்புடைய கூட்டுறவு நிறுவனங்களுக்கு வழங்காதது கடும் கண்டனத்திற்குரியது. எனவே தமிழ்நாடு முதல்-அமைச்சர் இதில் உடனடியாக தலையிட்டு, நகைக்கடன் தள்ளுபடி மற்றும் இதுநாள் வரையிலான வட்டியை அந்தந்த கூட்டுறவு நிறுவனங்களுக்கு உடனடியாக வழங்க ஆவன செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்