புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் 70 பேரும் பதவி ஏற்றனர்

புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் 70 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2022-03-02 19:59 GMT
 தாம்பரம்,

புதிதாக உருவாக்கப்பட்ட சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 70 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி 54 வார்டுகளில் வெற்றி பெற்று தாம்பரம் மாநகராட்சியை கைப்பற்றியது. அ.தி.மு.க. 9 வார்டுகளிலும், சுயேச்சைகள் 7 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர்.

தாம்பரம் மாநகராட்சி கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 70 கவுன்சிலர்களும் பதவி ஏற்றுக்கொண்டனர். தாம்பரம் மாநகராட்சியின் முதல் கவுன்சிலர்களான அவர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் டாக்டர் இளங்கோவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னைக்கு இணையாக....

இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், எம்.எல்.ஏ.க்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அப்துல் சமாத், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் ஆகியோர் கலந்துகொண்டு பதவி ஏற்றுக்கொண்ட கவுன்சிலர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் கவுன்சிலர்கள் அனைவருடனும் இணைந்து குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசும்போது, “சென்னைக்கு அடுத்த படியாக தாம்பரம் மாநகராட்சி ஊராட்சி பகுதிகளையும் இணைத்து மிகப்பெரிய மாநகராட்சியாக உருவாக்கப்படும். சென்னைக்கு இணையான வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் தாம்பரம் மாநகராட்சிக்கு கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும்” என்றார்.

தாம்பரம் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்