10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் சொன்ன ‘டிப்ஸ்’ - அமைச்சர் விளக்கம்..!
10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன டிப்ஸ் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை,
கொரோனா தொற்றால் கடந்த ஜனவரி மாதம் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் தற்போது வைரஸ் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வும் நடைபெற்று முடிந்துள்ளது.
இதனிடையே நடப்பு கல்வி ஆண்டில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்தார். அதன்படி, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு இன்று வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான அட்டவணை குறித்த அறிவிப்பை இன்று காலை 10 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.
இதன்படி
10ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.6-ஆம் தேதி தொடங்கி மே.30ஆம் தேதி வரை நடைபெறும்.
10ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்: ஜூன் 17ஆம் தேதி வெளியிடப்படும்.
11ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.9-ஆம் தேதி தொடங்கி மே.31ஆம் தேதி வரை நடைபெறும்.
11ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்: ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்படும்.
12ம் வகுப்புக்கான தேர்வுகள்: மே.5ஆம் தேதி தொடங்கி மே.28ஆம் தேதி வரை நடைபெறும்.
12ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள்: ஜூன் 23ஆம் தேதி வெளியிடப்படும்
10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள்: ஏப்ரல் 25ஆம் தேதி தொடங்கி மே 2ஆம் தேதி வரை நடைபெறும்.
மேலும் பொதுத்தேர்வுக்கான தேதி அட்டவணை இன்னும் 1 மணி நேரத்தில் http://tnschools.gov.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்படும்.
10,11,12ம் வகுப்பு தேர்வுகளை சுமார் 25 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இதன்படி 10 வகுப்பு பொதுத்தேர்வை 9 லட்சம் பேரும், 11ஆம் வகுப்பு தேர்வை 8.49 லட்சம் பேரும், 12ஆம் வகுப்பு தேர்வை 8.36 லட்சம் பேரும் எழுதுகின்றனர் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் 10, 11, 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்-அமைச்சர் சொன்ன ‘டிப்ஸ்’ குறித்து கூறிய அமைச்சர் அன்பில் மகேஷ், “பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகி உள்ள மாணவர்களை மகிழ்ச்சியாக படிக்க சொல்லுங்கள். மனநிறைவோடு தேர்வுகளை எழுதச் சொல்லுங்கள். அடுத்தவர்களின் திருப்திக்காக தேர்வு எழுதாதீர்கள். நான் படித்து நான் திருப்தி அடைந்திருக்கிறேன் என்ற அளவிற்கு தேர்வை எழுத வேண்டும்” என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியதாக அவர் கூறினார்.