முகநூல் காதல்: மாணவியை கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை
முகநூல் பக்கம் மூலம் பழகிய மாணவியை கடத்தி கட்டாய திருமணம் செய்த ஆந்திர வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்(22). இவர் முகநூல் பக்கம் மூலம் சென்னை கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவியுடன் பழகி இருக்கிறார். பின்னர் அந்த பழக்கம் காதலாக மாறியது. வாலிபர் சந்தோஷ் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டியுள்ளார்.பின்னர் மாணவியை ஆந்திராவிற்கு கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்ததாக தெரிகிறது. அடுத்து அந்த மாணவியை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதற்கிடையில் மாணவி காணாமல் போய் விட்டதாக, அவரது பெற்றோர் கீழ்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி, மாணவியை ஆந்திராவில் இருந்து மீட்டு வந்தனர்.
திருமண ஆசை காட்டி, மாணவியை கடத்திச்சென்று கட்டாய திருமணம் செய்து பாலியல் வன்கொடுமை செய்ததாக வாலிபர் சந்தோஷ் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் கீழ்பாக்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.