தி.மு.க. தொண்டரை தாக்கியதாக கைது: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

தி.மு.க. தொண்டரை தாக்கியதாக கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-25 22:02 GMT
சென்னை,

கடந்த 19-ந்தேதி நடந்த ஓட்டுப்பதிவின் போது சென்னை தண்டையார்பேட்டையில் கள்ள ஓட்டு பிரச்சினை விவகாரத்தில் தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் என்பவரை சட்டையை கழற்றி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு சென்னை செசன்சு கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அதேவேளையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரரான தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காரசார விவாதம்

நரேஷ்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமீன் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இயலாது. நரேஷ்குமார் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர், தற்போது வரை ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் தான் இருந்து வருகிறார். எனவே, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என்று வாதாடினார்.

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.நடராஜன், ‘எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரணை நடத்த மட்டுமே சிறப்பு கோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரும் மனுக்களை சிறப்பு கோர்ட்டுதான் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படவில்லை. டி.ஜெயக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இல்லை. ஆபாசமான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தான் தவறு. மற்றபடி சாதாரணமாக ஒரு சம்பவத்தை வீடியோ எடுக்கவோ, அதனை சமூகவலைதளத்தில் பதிவிடவோ எந்த கட்டுப்பாடும் இல்லை' என்று வாதாடினார்.

சாட்சிகளை கலைத்துவிடுவார்

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தேவராஜ், ‘இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. காயமடைந்த நரேஷ்குமார் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருகிறார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் தான் ஆகிறது. அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார். ஜெயக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது' என்றார்.

விசாரணையின்போது ஜெயக்குமார் தரப்பில், ‘நரேஷ்குமார் தொடர்பான வீடியோ பதிவு லேப்-டாப் மூலம் நீதிபதிக்கு காண்பிக்கப்பட்டது. அப்போது அந்த வீடியோவில் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அடிக்காதே அடிக்காதே என ஜெயக்குமார் கூறும் காட்சி பதிவாகி இருப்பதாக ஜெயக்குமார் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டினார். அதற்கு நரேஷ்குமார் தரப்பு வக்கீல், ‘இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது' என ஆட்சேபம் தெரிவித்தார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில், ‘ஜெயக்குமார் தரப்பில் காண்பிக்கப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. புகார்தாரர் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருகிறார். தலைமறைவாக உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்ற சம்பவத்தில் தொடர்புடைய கார், லேப்-டாப், செல்போன் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டு சில நாட்களே ஆகிறது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், அரசு மற்றும் புகார்தாரர் தரப்பில் ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாலும் தற்போதைய சூழ்நிலையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க முடியாது' என கூறி உள்ளார்.
ஜெயக்குமாரை காவலில் விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி முரளிகிருஷ்ண ஆனந்தன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருந்த டி.ஜெயக்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

போலீஸ் காவல் குறித்து ஜெயக்குமாரிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு ஜெயக்குமார், ‘போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை' என்றார். ஜெயக்குமார் தரப்பு வக்கீல், போலீஸ் காவலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டி.ஜெயக்குமாரை கோர்ட்டுக்கு அழைத்து வருவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டில் குவிந்தனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது.

மேலும் செய்திகள்