உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவிகளை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பெற்றோர் கோரிக்கை

உக்ரைனில் சிக்கி தவிக்கும் 2 மாணவிகளை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-02-25 18:52 GMT
மீஞ்சூர்,

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள காட்டாவூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி நாகஜோதி. இவர்களது மகள் ரித்திகாஜெகன் (வயது 20). இவர் டாக்டர் படிப்புக்காக உக்ரைன் நாட்டில் டேனேபீல் என்னும் இடத்தில் நேஷனல் மருத்துவ கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் ரஷிய நாட்டுக்கும், உக்ரைன் நாட்டுக்கும் இடையே தற்போது போர் நடந்து வருகிறது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. போர் காரணமாக உக்ரைன் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து படிப்புக்காக உக்ரைன் சென்றுள்ள மாணவ-மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவதிக்குள்ளாகி உள்ளனர். போர் பதற்றத்தால் சரியான முறையில் சாப்பிட முடியாமல் தமிழகத்தை சார்ந்த மாணவ-மாணவிகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.

கோரிக்கை

இந்த நிலையில் மீஞ்சூரை அடுத்த காட்டாவூர் கிராமத்தை சேர்ந்த உக்ரைன் நாட்டில் மருத்துவம் படித்து வரும் ரித்திகாஜெகனின் உறவினர்கள், பெற்றோர் பெரிதும் கவலை அடைந்துள்ளனர்.

அதேபோல் மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் பருகுணராஜ் - சுதா தம்பதியின் மகள் மோகனபிரியா (18). இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் நாட்டில் கிழக்கு பகுதியில் உள்ள கார்கியு என்ற இடத்தில் ஏரோநட்டிகல் பட்ட வகுப்பில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

தற்போது உக்ரைன்- ரஷியா இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் காரணமாக மோகன பிரியாவின் பெற்றோர், உறவினர்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். ரித்திகாஜெகன் மற்றும் மோகனப்பிரியாவின் பெற்றோர் தங்களது மகள்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்