மது குடிக்க தாயார் பணம் கொடுக்க மறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை
பூதப்பாண்டி அருகே மதுகுடிக்க தாயார் பணம் கொடுக்காததால் ஆட்டோ டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
அழகியபாண்டியபுரம்,
பூதப்பாண்டி அருகே உள்ள அருமநல்லூர் சாஸ்தான் கோவில் தெருவை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 26). இவர் அந்த பகுதியில் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனால் தினமும் தாயாரிடம் பணம் கேட்டு தகராறு செய்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினமும் நிஷாந்த் தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மேலும் நிஷாந்தின் தாயார் பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த நிஷாந்த் வீட்டில் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் நிஷாந்த் பரிதாபமாக இறந்தார்.
பின்னர் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க தாயார் பணம் கொடுக்க மறுத்ததால் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.