நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம் - சென்னை ஐகோர்ட்டை அணுக பா.ஜ.க. முடிவு
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் பற்றி அனைத்து வித புகார்களுடன் சென்னை ஐகோர்ட்டுக்கு செல்ல இருக்கிறோம் என பா.ஜ.க. தமிழக தலைவர் கூறியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 12 ஆயிரத்து 838 தொகுதிகளுக்கு 57 ஆயிரத்து 778 பேர் தேர்தலில் போட்டியிட்டனர்.
தேர்தலில் ஒட்டுமொத்தமாக 60.70 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. மாநகராட்சிகளில் 52.22 சதவீதம், நகராட்சிகளில் 68.22 சதவீதம், பேரூராட்சிகளில் 74.68 சதவீதம் வாக்குகள் பதிவானது.
ஓட்டுப்பதிவு முடிந்ததும் நேற்று முன்தினம் மாலை மின்னணு எந்திரங்கள் அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 268 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மையங்களில் உள் பகுதியிலும், வெளி பகுதியிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டது.
இந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் நடந்து வருகின்றன. இதில், மதியம் நிலவரப்படி தி.மு.க. 21 மாநகராட்சிகளிலும் அதிக வார்டுகளை வென்று முன்னிலை பெற்று இருந்தது.
இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முறைகேடுகள் பற்றி அனைத்து வித புகார்களுடன் சென்னை ஐகோர்ட்டை இன்று அணுக இருக்கிறோம் என பா.ஜ.க. தமிழக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, பிப்ரவரி 19ந்தேதி நகர்ப்பற உள்ளாட்சி தேர்தலை தி.மு.க. நடத்திய விதம் வெட்கக்கேடானது. ஒட்டு மொத்த அளவில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் வன்முறை நடந்து உள்ளது. எங்களுடைய அனைத்து புகார்களுடனும், குறிப்பிட்ட பூத்களில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சென்னை ஐகோர்ட்டுக்கு நாங்கள் இன்று செல்ல இருக்கிறோம்.
வாக்கு மையங்களுக்கு வெளியே தி.மு.க. ஆட்கள் நின்று கொண்டனர். இதனால், அவர்களுக்கு பயந்து மக்கள் வாக்களிக்க வெளியே வரவில்லை. வாக்கு சதவீதம் 14% குறைந்துள்ளது. மத்திய இணை மந்திரி எல். முருகன் வாக்கு கூட சிலரால் செலுத்தப்பட்டு உள்ளது. நாங்கள் போராட்டம் நடத்திய பின்னரே அவரை வாக்களிக்க அனுமதித்தனர் என்று கூறியுள்ளார்.