சென்னையில் வாக்குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற்று வருகிறது - ககன்தீப் சிங் பேடி
சென்னையில் அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார்.
சென்னை,
வாக்கு எண்ணும் மையங்களில் மூத்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் பலத்த பாதுகாப்பு போலீஸ் போடப்பட்டுள்ளது" என்று சென்னை மாநகராட்சி ஆணையரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களில் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது: "காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. 8 மணிக்கு தபால் வாக்குகள் வார்டு வாரியாக பிரிக்கப்பட்டன. பின்னர், 8.30 மணியிலிருந்து வார்டு வாரியாக பதிவான தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளும் 10 முதல் 14 மேஜைகளில் முதல் சுற்று வாக்குகளும் எண்ணப்பட்டு வருகிறது. பெரும்பாலான வார்டுகளில் முதல் சுற்று எண்ணிக்கை முடிந்துள்ளது, சில இடங்களில் முடியும் தருவாயில் உள்ளது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் ஒரு வார்டில் பதிவான வாக்குகளை எண்ணி முடிப்பதற்கு ஒரு மணி நேரம் முதல் ஒன்றரை மணி நேரம் ஆகிறது. அனைத்து வார்டுகளின் முடிவுகளும் விரைவில் தெரியவரும் என எதிர்பார்க்கிறேன். அனைத்து இடங்களிலும் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடைபெற்று வருகிறது. மூத்த காவல்துறை அதிகாரிகளின் தலைமையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் முகவர்களுக்கு செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
பெரும்பாலான வார்டுகளின் முடிவுகள் இரண்டு அல்லது மூன்று சுற்றுகளின் முடிவில் தெரியவரும். வேட்பாளர்கள், முகவர்கள் நன்றாக ஒத்துழைப்பு கொடுக்கின்றனர். அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுவரை சென்னையில் எந்த பிரச்சினையும் இல்லை" என்று அவர் தெரிவித்தார்.