தமிழகம் முழுவதும் 268 மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் 268 மையங்களில் நாளை (செவ்வாய்க்கிழமை) எண்ணப்படுகின்றன.

Update: 2022-02-20 22:02 GMT
60.70 சதவீதம் வாக்குப்பதிவு

தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவி இடங்களுக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. இதற்காக 30 ஆயிரத்து 735 வாக்குச்சாவடிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தல் ஆணையமும், போலீசாரும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து இருந்ததால் பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் நிகழாமல் தேர்தல் அமைதியான முறையில் நடந்து முடிந்தது. எனினும் சில மையங்களில் சிறு சிறு அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறின. தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பு இன்றி, மந்தமாகவே இருந்தது. மொத்தம் 60.70 சதவீத வாக்குகள் பதிவானது.

சென்னை மாநகராட்சியில் 5 ஆயிரத்து 794 வாக்குசாவடிகளில் நடைபெற்ற தேர்தலில் 43.65 சதவீத வாக்குகள் பதிவாகின. புதிதாக உதயமான தாம்பரம் மாநகராட்சியில் 49.98 சதவீதம் பேரும், ஆவடி மாநகராட்சியில் 59.13 சதவீதம் பேரும் வாக்குகளை பதிவு செய்தனர். ஓட்டுப்பதிவு முடிந்த பின்னர், வாக்குகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்கள், முகவர்கள் முன்னிலையில் தேர்தல் அலுவலர்களால் ‘சீல்’ வைக்கப்பட்டது.

3 அடுக்கு பாதுகாப்பு

தேர்தல் முடிந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என 268 இடங்கள் வாக்கு எண்ணும் மையங்களாக ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த மையங்களில், எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த அறை முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். சகண்காணிப்பு கேமராக்கள் மூலமாகவும் இந்த மையங்களில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

சென்னையில் 15 மண்டலங்களில்...

சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் (1-14 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் திருவொற்றியூர் டி.எச்.சாலையில் அமைந்துள்ள வெள்ளையன் செட்டியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மையத்திலும், மணலி மண்டலத்தில் (15-22 வார்டுகள்) பதிவான வாக்குகள் மணலி பாடசாலை தெரு அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திலும், மாதவரம் மண்டலத்தில் (23-33 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் புழல் சூரப்பட்டு வேலம்மாள் என்ஜினீயரிங் கல்லூரி மையத்திலும், தண்டையார்பேட்டை மண்டலத்தில் (34-48 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் தண்டையார்பேட்டை காமராஜ் சாலை ஆர்.கே.நகர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும், ராயபுரம் மண்டலத்தில் (49-63 வார்டுகள்) பதிவான வாக்குகள் பிராட்வே பாரதி மகளிர் கல்லூரி மையத்திலும் எண்ணப்படுகின்றன.

திரு.வி.க.நகர் மண்டலத்தில் (64-78 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் நம்மாழ்வார்பேட்டை வரதம்மாள் கார்டன் 3-வது தெருவில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும், அம்பத்தூர் மண்டலத்தில் (79-93 வார்டுகள்) முகப்பேர் கிழக்கு தாய் மூகாம்பிகை பாலிடெக்னிக் கல்லூரி மையத்திலும், அண்ணாநகர் மண்டலத்தில் (94-108 வார்டுகள்) பதிவான வாக்குகள் கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி மையத்திலும், தேனாம்பேட்டை மண்டலத்தில் (109-126 வார்டுகள்) பதிவான வாக்குகள் நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி மையத்திலும், கோடம்பாக்கம் மண்டலத்தில் (127-142 வார்டுகள்) பதிவான வாக்குகள் விருகம்பாக்கம் மீனாட்சி என்ஜினீயரிங் கல்லூரி மையத்திலும், வளசரவாக்கம் மண்டலத்தில் (143-155 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் மதுரவாயல் எம்.ஜி.ஆர். என்ஜினீயரிங் கல்லூரி மையத்திலும், ஆலந்தூர் மண்டலத்தில் (156-167 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் ஆலந்தூர் ஏ.ஜே.எஸ். நிதி மேல்நிலைப்பள்ளி மையத்திலும், அடையார் மண்டலத்தில் (168-180 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழக மையத்திலும், பெருங்குடி மண்டலத்தில் (181-191 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் பள்ளிக்கரணை ஜெருசலேம் என்ஜினீயரிங் கல்லூரி மையத்திலும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் (192-200 வார்டுகள்) பதிவான ஓட்டுகள் சோழிங்கநல்லூர் முகமது சாதிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மையத்திலும் எண்ணப்படுகின்றன.

இன்று (திங்கட்கிழமை) மறுதேர்தல் நடைபெறும் ராயபுரம் மண்டலத்துக்கு உட்பட்ட 51-வது வார்டு வண்ணாரப்பேட்டை (எண்-1174) வாக்குச்சாவடியிலும், அடையார் மண்டலத்தில் அடங்கி உள்ள 179-வது வார்டு பெசன்ட் நகர் ஓடைக்குப்பம் (எண்-5059) வாக்குச்சாவடியிலும் பதிவான வாக்குகளும் நாளை எண்ணப்பட உள்ளது.

கடும் கட்டுப்பாடுகள்

சென்னையில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில், 11 மையங்கள் சென்னை மாநகர போலீஸ் எல்லைக்குள் வருகிறது. இந்த ஒவ்வொரு மையத்திலும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் கூடுதல் மற்றும் இணை கமிஷனர்கள் ஆலோசனையின்படி துணை கமிஷனர்கள் நேரடி மேற்பார்வையில் ஒரு உதவி கமிஷனர் தலைமையில் 48 போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் இரவு-பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.

வாக்கு எண்ணிக்கை எந்தவித அசம்பாவித சம்பவங்களும் இன்றி அமைதியான முறையில் நடப்பதற்கான ஏற்பாடுகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் போலீசார் மேற்கொண்டு உள்ளனர். அதன்படி வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவர்களது முகவர்கள் மற்றும் செய்தியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரியால் வழங்கப்பட்டுள்ள உரிய அடையாள அட்டை இல்லாதவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

வாக்கு எண்ணும் மையத்துக்குள் வேட்பாளர்கள், முகவர்கள் செல்போன் எடுத்து செல்ல அனுமதி இல்லை. வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரம் அறிவிக்கும்போது வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து 100 மீட்டர் எல்லைக்குள் பட்டாசு வெடிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநகரங்களிலும், மாவட்டங்களிலும் அடுத்த 3 நாட்கள் தீவிர கண்காணிப்பு பணியை தொடர வேண்டும் என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.

எனவே வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து விரிவான விவரங்களை போலீசார் இன்று வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்