தூக்கில் தொங்கிய நிலையில் லாரி டிரைவர்: கொலையா தற்கொலையா என போலீஸ் விசாரணை
வேடசந்தூர் அருகே மலைப்பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்த லாரி டிரைவரின் உடலை மீட்டு கொலையா தற்கொலையா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்ட எல்லையான கல்வார்பட்டியை அடுத்துள்ள கனவாய் மேட்டில் ஒரு லாரி தனியாக நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தது. அந்த வழியாக ரோந்து சென்ற போலீசார் லாரியில் ஏறி பார்த்தபோது செல்போன் மற்றும் லாரியின் சாவி ஆகியவை கிடந்தது. இதனையடுத்து லாரியின் உரிமையாளரரை தொடர்பு கொண்டு பேசியபோது அந்த லாரியை நமக்கல் மாவட்டம் கும்மாநாயக்னூரைச் சேர்ந்த வெங்கடசலம்(38) என்பவர் ஓட்டி வந்ததாகவும், நாமக்கல்லில் இருந்து மதுரைக்கு பஞ்சு பேரல் ஏற்றி வந்ததாக தெரிந்தது.
இதனையடுத்து லாரியை நிறுத்திவிட்டு மாயமான லாரி டிரைவரை கூம்பூர் போலீசார் தேடி வந்தனர். 5 மணி நேர தேடுதலுக்கு பிறகு இன்று மாலை அருகே உள்ள ரெங்கமலைப்பகுதியில் போலீசார் ஏறிச்சென்று பார்த்தபோது லாரி டிரைவர் வெங்கடாசலம் மரத்தில் துண்டால் தூக்குப்போட்டு இறந்தது நிலையில் கிடந்தது. உடலில் காயங்கள் இருந்தது தெரிந்தது.
இது குறித்து கூம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் வெங்கடாசலம் உடலை மீட்டு வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
கரூர் மாவட்டம் ஆண்டிபட்டிகோட்டை சுங்கச்சாவடி கண்காணிப்பு கேமராவை போலீசார் ஆய்வு செய்தபோது நள்ளிரவி 1 மணிக்கு லாரி கடந்து வந்தது தெரிந்தது. லாரியை ஆனாதையாக நிறுத்திவிட்டு மலைப்பகுதியில் ஏறிச்சென்று தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாராவது அவரை கடத்திச்சென்று கொலை செய்தனரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.